Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் ஒழிப்பு: தீவிரப்படுத்த திட்டம்

Print PDF
தினமணி     28.03.2013

பிளாஸ்டிக் ஒழிப்பு: தீவிரப்படுத்த திட்டம்


திருநெல்வேலி மாநகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் நிகழாண்டில் தீவிரப்படுத்தப்படும் என்று 2013-14-ம் நிதியாண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சிறப்புத் திட்டங்களில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இம் மாநகராட்சியில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2011-ன்படி 40 மைக்ரான் அளவுக்கு கீழுள்ள பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

அதன்படி மாநகரில் கடந்த ஆண்டு ஜூன் முதல் பிளாஸ்டிக் உபயோகிப்பது தடை செய்யப்பட்டது. அதை மீறுவோருக்கு அபராதம் விதிக்கவும் திட்டமிடப்பட்டது.

இந்த நிதியாண்டில் இது நடைமுறைப்படுத்தப்படும். விநியோகிப்பாளர்கள் நுகர்வோருக்கு பொருள்களை இலவச பிளாஸ்டிக் பைகள் மூலம் வழங்கக் கூடாது என்பதாலும், நுகர்வோர் விநியோகம் செய்து பெறப்படும் பொருள்களின் கொள்ளளவு மற்றும் அதன் தன்மைக்கு ஏற்ப பிளாஸ்டிக் அல்லாத தரம் வாய்ந்த பைகளை வழங்கவும் விநியோகிப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த விதிகள் தீவிரப்படுத்தப்படும்.

பேருந்து நிலையங்களை மேம்படுத்துதல்: திருநெல்வேலி வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் புதிய பேருந்துகள் நிறுத்துமிடம், பயணிகள் கூடம், கூடுதலாக கழிப்பறை கட்டடம் கட்டுவதற்கு பட்ஜெட்டில் ரூ.75 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. சந்திப்பு பேருந்து நிலையத்தில் பழுதடைந்துள்ள மேற்கூரைகளை நீக்கி புதுப்பிக்கவும், மேலும் விரிவாக்கம் செய்யவும் ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இப் பேருந்து நிலையத்தில் ரூ.6.25 கோடியில் அடுக்குமாடி வாகன காப்பகம் மற்றும் பேருந்து நிறுத்துமிடம் கட்டுவதற்கு நிகழாண்டில் கலந்தாலோசகர் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

பாளையங்கோட்டை பேருந்து நிலையப் பகுதிகளை விரிவாக்கம் செய்யவும், அதிலுள்ள இடங்களில் வணிக வளாகம் கட்டவும், பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை மருத்துவமனை வளாகத்தில் காலிமனையில் வணிக வளாகம் கட்டவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

குப்பையிலிருந்து மின்சாரம்: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் நாளொன்றுக்கு சேகரமாகும் 150 மெட்ரிக் டன் குப்பைகள் ராமையன்பட்டி உரக்கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்கு ரூ.55 கோடியில் குப்பையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும். தாமிரவருணி ஆற்றுப்படுகைகளிலும், மாநகராட்சி பூங்காக்களிலும், பொது இடங்களிலும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வளாகங்களிலும், மாநகராட்சிப் பள்ளிகளிலும் 65 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடிநீர் இணைப்புகள்: மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் விதிமுறைகளுக்கு உள்பட்டு குடிநீர் இணைப்புகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாளையங்கோட்டை, திருநெல்வேலி, மேலப்பாளையம் மண்டலங்களில் அமைந்துள்ள தினசரி சந்தைகள் மேம்படுத்தப்படும். ஸ்ரீபுரம் பகுதியில் பயணியர் தங்கும் விடுதி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ராமையன்பட்டி பகுதியில் நாய்கள் கருத்தடை அறுவைச் சிகிச்சை மையம் அமைக்கப்படவுள்ளது. குடும்பநல அறுவைச் சிகிச்சைக்காக மீனாட்சிபுரம் நகர்நல மையத்தை அறுவைச் சிகிச்சை மையமாக நவீன முறையில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கழிவுகளில் இருந்து மின்சாரம்: பழைய பேட்டை மற்றும் மேலப்பாளையம் பகுதியில் சேகரிக்கப்பட்டுவரும் மட்கும் கழிவுகளைப் பயன்படுத்தி பயோ மீதேனேஷன் முறையில் ரூ.1 கோடியில் மின்சாரம் தயார் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.1 கோடியில் திடக்கழிவு மேலாண்மைக்கான உபகரணங்கள் வாங்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையை குறுக்குத்துறை சாலையுடன் இணைக்கும் திட்டம் அரசாணை பெறும் நிலையில் உள்ளது. வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ராஜராஜேஸ்வரி நகர் அருகில் சாலையோர பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பூங்காக்கள், மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களை பாதுகாக்கும் வகையில் வேலி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் மீன்வளத்துறையின் பங்களிப்புடன் நவீன வசதிகளுடன் மீன் சந்தை அமைக்கப்படும். மாநகராட்சிப் பகுதியில் தெருவிளக்குகளிலும் மின்சார சிக்கன பல்புகள் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.