Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சித்திரைத் திருவிழா: சுகாதார வசதிகளுக்காக மாநகராட்சி சார்பில் ரூ.47.43 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினமணி          14.04.2013

சித்திரைத் திருவிழா: சுகாதார வசதிகளுக்காக மாநகராட்சி சார்பில் ரூ.47.43 லட்சம் ஒதுக்கீடு

சித்திரைத் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், சுகாதார வசதிகளை அளிப்பதற்காக, மதுரை மாநகராட்சி சார்பில் ரூ. 47,43,300 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று, மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா தெரிவித்துள்ளார்.

இது குறித்து, செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியது:

சித்திரைத் திருவிழாவையொட்டி, திருவிழா நடைபெறும் இடங்களில் 50 குடிநீர் குழாய்கள் அமைக்கப்படும். மேலும், 24 இடங்களில் குழாய்கள் பொருத்தப்பட்ட குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்படும். இந்தத் தொட்டிகளில் லாரிகள் மூலம் குடிநீர் நிரப்பப்படும். உணவகங்கள், தேநீர் கடைகளில் உள்ள குடிநீரில் குளோரின் அளவு பரிசோதிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவிழா நடைபெறும் பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பறைகள், முழுநேரமும் பயன்படத்தக்க வகையில் பராமரிக்கப்படும். மேலும், முக்கியப் பகுதிகளுக்கு அருகே நடமாடும் கழிப்பறைகளை நிறுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவிழா நடைபெறும் பகுதிகளை உள்ளடக்கிய வார்டுகளில் இப்போது உள்ள துப்புரவுப் பணியாளர்களுடன், கூடுதலாக தாற்காலிக பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் நியமிக்கப்படுவர். மாட்டுத்தாவணி பஸ் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாற்காலிக துப்புரவுப் பணியாளர்கள் 20 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

இதன்படி, நகரின் வடகரையில் திருவிழா இடங்களில் 10 நாள்களுக்கு 170 பேரும், தென்கரையில் 7 நாள்களுக்கு 370 பேரும் பணியில் அமர்த்தப்படுகின்றனர்.

திருவிழாவையொட்டி, அன்னதானம் வழங்குவதற்கான உணவு தயாரிக்கும் இடங்கள், உணவு வழங்கப்படும் இடங்கள் ஆகியன சுகாதாரமாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்க, உணவுப் பாதுகாப்புத் துறைக்கு மாநகராட்சியால் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்ந்து, மாநகராட்சியின் அனைத்து சுகாதார ஆய்வாளர் அலுவலகங்களிலும் தொற்று நோய்த் தடுப்பு மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மணி மகப்பேறு மருத்துவமனை, முத்து சாரதா ஸ்கேன் சென்டர், கே.புதூர் மகப்பேறு மருத்துவமனை, தல்லாகுளம் சுகாதார ஆய்வாளர் அலுவலகம், ராமராயர் மண்டபம் ஆகிய இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் செயல்படும்.

திருவிழா பகுதிகளில் உள்ள நல்வாழ்வு மையங்கள், மகப்பேறுமனைகள், மருந்தகங்கள் ஆகியன திருவிழா நாள்களிலும் முழுநேரம் இயங்கும்.

வைகை ஆற்றுப் படுகைகளிலும், திருவிழா நடைபெறும் இடங்களிலும் மிகுந்த ஒளிதரக்கூடிய மின்விளக்குகள் அமைக்கப்படும். தெரு விளக்குகளில் அதிக ஒளிதரக்கூடிய பல்புகள் பொருத்தப்படும். இப்பகுதிகளில் தடையற்ற வகையில் மின்விநியோகம் செய்வதற்கும், மின்துறை அமைச்சர் மற்றும் மின்வாரியத்துக்கு வேண்டுகோள் அனுப்பப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் பெட்ரோமாக்ஸ் விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மாநகராட்சி ஆணையர் ஆர். நந்தகோபால், துணைமேயர் ஆர். கோபாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.