Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ராமேசுவரத்தில் நாளை குப்பைகள் அகற்றப்படும்

Print PDF

தினமணி 18.09.2009

ராமேசுவரத்தில் நாளை குப்பைகள் அகற்றப்படும்

ராமநாதபுரம், செப். 17: சர்வதேசக் கடலோரத் தூய்மை தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சனிக்கிழமை ராமேசுவரத்தில் குப்பைகளை சேகரித்து அகற்ற முடிவு செய்திருப்பதாக, மாவட்ட வருவாய் அலுவலர் கே. பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் சர்வதேசக் கடலோரத் தூய்மை தினம் கொண்டாடப்படுவது குறித்த முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அதிகாரி கே. பாலசுப்பிரமணியம் தலைமை வகித்துப் பேசியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேசக் கடலோரத் தூய்மை தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே, ராமேசுவரம், அரியமான் கடற்கரைப் பகுதிகளில் சுற்றுலாவினரால் கொட்டப்பட்ட ஈரத்துணிகள், பாலித்தீன் உள்ளிட்ட குப்பைகளை, சனிக்கிழமை நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் போது அகற்றப்படும்.

மேலும், சுற்றுப்புறத் தூய்மை குறித்து பொதுமக்கள், பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும்.

இப்பணிகள், ராமேசுவரம் மற்றும் அரியமான் கடற்கரையில் சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி 9.30 மணிக்கு முடிவடைகிறது. இதில், என்.எஸ்.எஸ்., என்.சி.சி., சாரணர்படை மாணவர்கள், கடற்படை மற்றும் ஊர்க்காவல் படையினர், மீனவர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

துப்புரவுப் பணியில் ஈடுபடுவோருக்கு கையுறைகள், குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளைச் சுத்தம் செய்யும் பணியில் அரசுத்துறை அலுவலர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, அவர் கேட்டுக் கொண்டார்.

கூட்டத்துக்கு, கடலோரக் காவல்படை கமாண்டர்கள் ஜி. வேணுமாதவ், .கே. முட்கல், மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஆர். தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) . ஜெயராமன், உதவி வனப் பாதுகாவலர் பி. வீரபத்திரன், உச்சிப்புளி கடற்படை விமான நிலைய அலுவலர் ஆர். ரவிக்குமார் உள்பட அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Last Updated on Friday, 18 September 2009 06:31