Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

துப்புரவு பணி மேற்கொண்ட தனியார் நிறுவனத்துக்கு டாட்டாகுட்பை:மீண்டும் பணியில் களமிறங்கியது நகராட்சி

Print PDF
தினமலர்        08.05.2013

துப்புரவு பணி மேற்கொண்ட தனியார் நிறுவனத்துக்கு டாட்டாகுட்பை:மீண்டும் பணியில் களமிறங்கியது நகராட்சி


பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 12 வார்டுகளில் துப்புரவு பணி மேற்கொண்ட தனியார் நிறுவனத்துக்கு குட்பை சொன்னது நகராட்சி. தற்போது குறைந்த எண்ணிக்கையிலுள்ள நகராட்சி துப்புரவு பணியாளர்களை கொண்டு மொத்தமுள்ள 36 வார்டுகளிலும் பணி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில், துப்புரவு பணி மேற்கொள்ள நிரந்தர மற்றும் தற்காலிக துப்புரவு பணியாளர்கள் 312 பேர் பணி நியமனம் செய்யப்பட்டிருந்தனர். வயோதிகம், ஓய்வு, விபத்தில் இறப்பது உள்ளிட்ட காரணங்களால் துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து போனது.

இவர்களுக்கு பதிலாக புதிய பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.இருக்கும் பணியாளர்களை கொண் டே, நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. துப்புரவுப்பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை என்று தனியார் அமைப்புகள், பொதுநல அமைப்புகள், பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து ஏராளமான புகார்கள் நகராட்சிக்கு சென்றன.கடந்த ஜனவரி மாதத்திலிருந்து, கோவையிலுள்ள ஜென்னீஸ் ஹெல்த் அன்டு சேப்டி சர்வீஸஸ் என்ற தனியார் நிறுவனத்திடம் துப்புரவு பணிகளை மேற்கொள்ள நகராட்சி அறிவுறுத்தியது. முதற்கட்டமாக இரண்டு மாதங்கள் பொள்ளாச்சி நகர பஸ் ஸ்டாண்ட்களை தூய்மைப்படுத்தி பாராட்டையும் பெற்றனர். இதையடுத்து நகர்நல அலுவலர் பொறுப்பு வகிக்கும் மாரியப்பன் அறிவுறுத்தலின் பேரில், அந்த தனியார் நிறுவனம் நகராட்சிக்குட்பட்ட 12 வார்டுகளில் துப்புரவுப் பணி மேற்கொண்டது.

துப்புரவுப்பணியை திட்டமிட்டு செய்தது. இது குறித்து நகரமன்றத்தில் விவாதம் அனல்பறந்தது. தனியார் நிறுவனப்பணியாளர்கள் பணிபுரியும் இடங்களில் மட்டும் தெருக்கள் பளிச்சிடுகிறது. அதே போல் எங்கள் வார்டுகளிலும் பணி மேற்கொள்ள வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். அத்தனியார் நிறுவனம் துப்புரவுப்பணி மற்றும் மேற்பார்வைப்பணியை மேலும் தீவிரப்படுத்தியது. இதற்காக பயிற்சி பெற்ற துப்புரவுப் பணியாளர்களை பணியில் அமர்த்தியது.

இச்சூழலில் நகராட்சியில் தனியார் துப்புரவுப்பணி மேற்கொண்ட ஜென்னீஸ் ஹெல்த் அன்டு சேப்டி சர்வீஸஸ் என்ற தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்தனர். இது குறித்து நகர்நல அலுவலர் (பொறுப்பு) மாரியப்பனிடம் கேட்ட போது, ""தனியார் நிறுவனப்பணி திருப்தியளிக்கவில்லை அதனால் நகராட்சி நிர்வாகம் வெளியேற்றி விட்டது. தற்போதுள்ள 176 நிரந்தர பணியாளர்களோடு, மேலும் 136 தற்காலிக பணியாளர்களை அன்றாடம் ரூ.150 சம்பளத்துக்கு தேர்வு செய்துள்ளோம். இவர்கள் தனியார் நிறுவனத்தின் கீழ் பணிபுரிந்த தொழிலாளர்கள். அதனால் பணிகள் சிறப்பாக மேற்கொள்கின்றனர். இதில் 10 ஆண்களும்
உள்ளனர்,'' என்றார்.

இது குறித்து நகராட்சி கவுன்சிலர்கள் சிலர் கூறுகையில், "துப்புரவுப்பணிகளை தனியார் நிறுவனம் சிறப்பாக மேற்கொண்டது ஆனால், நகராட்சி அதிகாரிகள் சிலர் திருப்தியடையாத காரணத்தால், மக்களால் வரவேற்கப்பட்ட நிறுவனம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது' என்றனர்.