Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விழுப்புரம் பஸ் நிலையத்தில் மழைநீர் கால்வாய் பணி தீவிரம்

Print PDF

தினமணி 21.09.2009

விழுப்புரம் பஸ் நிலையத்தில் மழைநீர் கால்வாய் பணி தீவிரம்

விழுப்புரம், செப். 20: விழுப்புரத்தில் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்குவதால் மழைக் காலங்களில் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். இந்த மழைநீரை வெளியேற்ற ரூ.30 லட்சம் செலவில் நிரந்தர கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் புதிய பஸ் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் உள்ளிட்டவை ஏரிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. இப் பகுதியில் சிறிய மழை பெய்தாலே மழைநீர் அதிக அளவில் தேங்கி விடுகிறது. புதிய பஸ் நிலையத்தில் மழைக் காலங்களில் எப்போதும் நீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கும். பல நேரங்களில் டீசல் என்ஜின் கொண்டு மழைநீரை வெளியேற்றும் சம்பவங்களும் நடந்தன.

நிரந்தர கால்வாய்

இம் மழைநீரை வெளியேற்ற நிரந்தர கால்வாய்களை அமைக்க விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரு பிரிவுகளாக பிரித்து ஒப்பந்தாரர்களுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

பஸ் நிலையத்தில் நிர்ந்தர கால்வாய் அமைத்து அவற்றை பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள தொட்டியில் விடுவதுபோல் அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

பின்னர் இந்த தொட்டிகளில் தேங்கும் நீர் சாலாமேடு பகுதிக்கு அனுப்பப்படும். அப் பகுதி பஸ் நிலையத்தில் இருந்து மேடான பகுதியாக உள்ளதால் அங்கு மோட்டார் கொண்டு தண்ணீர் வெளியேற்றும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இனி வரும் காலங்கள் மழைக்காலங்கள் என்பதால் இப் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்கின்றனர் இப் பகுதி மக்கள்.