Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெருமாள் தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும்: மேயர்

Print PDF

தினமணி 23.09.2009

பெருமாள் தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும்: மேயர்

மதுரை, செப். 22: டவுன்ஹால் சாலை பகுதியில் உள்ள பெருமாள் தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும் என்று மேயர் ஜி. தேன்மொழி தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட 31 முதல் 43 வரை மற்றும் 60 முதல் 65 வரையிலான வார்டுகளில் பொதுமக்களின் குறைதீர்க்கும் நிகழ்ச்சி, தெற்கு மண்டல அலுவலகத்தில் மேயர் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின், துணை மேயர் பி.எம். மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் அகற்றுதல், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு உரிய வரி விதிப்பு குறித்து பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள் சார்பில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் மேயரிடம் வழங்கப்பட்டன.

அனைத்து மனுக்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார்.

பின்னர் பெருமாள் தெப்பக்குளத்தை பார்வையிட்ட மேயர், தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும், குளத்தைச் சுற்றியுள்ள உணவகங்கள், தங்கும் விடுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலக்காமல் இருக்க, உணவகங்கள் மற்றும் விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கவும் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, கூடலழகர் பெருமாள் கோயில் பகுதியில் குடிநீர்க் குழாயில் கழிவுநீர் கலந்துவருவதைப் பார்வையிட்டு உடனடியாக சரிசெய்ய உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில், மண்டலத் தலைவர் அ. மாணிக்கம், கவுன்சிலர்கள் கே. செல்லத்துரை, எம். கண்ணன், கா.ரா. முருகேசன், கே.பி. கலைச்செல்வி, தலைமைப் பொறியாளர் கே. சக்திவேல் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Last Updated on Wednesday, 23 September 2009 06:14