Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நீர்வழித்தடங்களில் வசிப்பவர்களுக்கு விரைவில் இலவச கொசு வலை

Print PDF

தினமணி              14.06.2013

நீர்வழித்தடங்களில் வசிப்பவர்களுக்கு விரைவில் இலவச கொசு வலை

கூவம் உள்பட சென்னை நகரில் உள்ள நீர்வழித் தடங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு இலவச கொசுவலை வழங்கப்பட உள்ளது.

இதற்கான பணிகள் மாநகராட்சியில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 15 மண்டலங்களிலும் உள்ள பயனாளிகளுக்கு விரைவில் கொசுவலைகள் வழங்க உள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுமார் 5 லட்சம் கொசு வலைகள் வழங்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான டெண்டர் ஏற்கனவே விடப்பட்டுள்ளது. சென்னையில், கொசு ஒழிப்புக்காக, ஆண்டுக்கு ரூ.5 கோடி வரை செலவு செய்தும் போதிய பலன் கிடைக்கவில்லை.

இந்நிலையில், கால்வாய் ஓரம் மற்றும் சாலையோரங்களில் வசிப்போருக்கு சிக்குன் குனியா, டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் தாக்க அதிக வாய்ப்புள்ளதால், அவர்களுக்கு இலவசமாக கொசு வலைகள் வழங்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்திருந்தது.

ஆறுக்கு ஆறடி கொண்ட பாலி எத்தினால் ஒற்றை இழையால் செய்யப்பட்ட கொசு வலைகள் அவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதற்காக நீர்வழி கரையோர குடிசை வாசிகளைக் கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டது.

தற்போது பருவமழைக் காலம் தொடங்கிவிட்டதால் மாநிலம் முழுவதும் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. சென்னையில் வெப்பச் சலனம் காரணமாக இம்மாத இறுதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும் காலம் என்பதால் கொசுவலைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் டெண்டர் திறக்கப்பட்டு கொசுவலைகள் கொள்முதல் செய்யப்படும் எனவும், முதல்கட்டமாக எத்தனை பயனாளிகளுக்கு வழங்குவது என்பது குறித்து திட்டமிட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.