Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

போடியில் துப்புரவுப் பணிகள் தனியார்மயம்

Print PDF
தினமணி               04.07.2013

போடியில் துப்புரவுப் பணிகள் தனியார்மயம்

போடியில் துப்புரவுப் பணிகள் தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்தும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

 போடி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இவற்றில், தற்போது நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்பவும், நகரின் வளர்ச்சிக்கேற்பவும் போதிய துப்புரவுப் பணியாளர்கள் இல்லை. இதனால், பல வார்டுகளில் துப்புரவுப் பணிகள் நடைபெறாமல் தேங்கியுள்ளன. எனவே, போடி பகுதியில் டெங்கு உள்ளிட்ட மர்மக் காய்ச்சல் வேகமாக பரவும் சூழல் உள்ளது. இது குறித்து, நகர்மன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து நகர்மன்றக் கூட்டங்களில் புகார் தெரிவித்து வந்தனர். இருப்பினும், தற்போதுள்ள நகராட்சி வருவாயின் அடிப்படையில் கூடுதலாக துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க முடியாத நிலை இருந்து வந்தது.

 இதைடுத்து, போடி நகராட்சியில் துப்புரவுப் பணிகளை படிப்படியாக தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான தீர்மானம் நகர்மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக போடி நகராட்சியில் மேற்கு பகுதியில் 28 முதல் 33 வரையிலான 6 வார்டுகள் தனியார் நிறுவனம் மூலம் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டன.

 இதற்கான ஒப்பந்தம், அவர் லேண்ட் இன்ஜினீயரிங் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிறுவனம் 6 வார்டுகளுக்கு 54 துப்புரவுப் பணியாளர்களை நியமித்துள்ளது. இவர்கள் மூலம் நகராட்சி நிர்வாகம் பணிகளை மேற்கொள்ளும். இதற்காக, ஆண்டு ஒன்றுக்கு ரூ. 49 லட்சத்து 80 ஆயிரம் செலவாகும்.

 தனியார் நிறுவனம் மூலம் துப்புரவுப் பணிகள், புதன்கிழமை சுப்புராஜ் நகர் சிட்னி விளையாட்டு மைதானம் அருகே தொடங்கப்பட்டது. ஆணையர் எஸ். சசிகலா தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் வி.ஆர். பழனிராஜ் துப்புரவு உபகரணங்களை வழங்கி, துப்புரவுப் பணியை தொடங்கி வைத்தார்.

 நிகழ்ச்சியில், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயராம் பாண்டியன், சித்திரன், முரசு பாலு மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.