Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுகாதாரத்தை மேம்படுத்த மாநகராட்சி முயற்சி! 18 இடங்களில் "நம்ம டாய்லெட்' வசதி

Print PDF

தினமலர்           27.09.2013

சுகாதாரத்தை மேம்படுத்த மாநகராட்சி முயற்சி! 18 இடங்களில் "நம்ம டாய்லெட்' வசதி

திருப்பூர் :திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில், சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அதிநவீன முறையில், 3.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 18 இடங்களில் "நம்ம டாய்லெட்' என்ற பொதுக்கழிப்பிடங்கள் அமைக்கப்பட உள்ளன.

திருப்பூர் மாநகராட்சியில், திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழிக்கும் வகையில், பொதுக்கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசு உத்தரவுப்படி, அதிநவீன முறையில் கட்டமைக்கப்படும் "நம்ம டாய்லெட்' என்ற பொதுக்கழிப்பிடங்கள் அமைக்கப்பட உள்ளன. வழக்கமான சிமென்ட், செங்கல் மூலமாக அல்லாமல், "காம்போசிட் மெட்டீரியல்' மூலமாக "மோல்டிங்' முறையில் கழிப்பிடங்கள் அமைக்கப்படும்.

கழிப்பறைகள் 1.21 மீட்டர் நீளம் மற்றும் ஒரு மீட்டர் அகலத்தில் அமைக்கப்படும். இட வசதியை பொறுத்து, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, தனித்தனியாக இரண்டு சாதாரண கழிப்பறைகளும், ஒரு மாற்றுத்திறனாளி கழிப்பறையும் அமைக்கப்படும். முக்கியமான இடங்களில், குளியலறை, கழிப்பிடம் உள்ளிட்டவை அமைந்த சுகாதார வளாகமும் அமைக்கப்பட உள்ளன.

சோலார் மின்னுற்பத்தியுடன், முழுவதும் நவீனமாக அமைக்கப்பட உள்ளது. குறிப்பாக, எளிதாக பராமரிக்கும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. பெண்கள் "நாப்கின்'களை அப்புறப்படுத்த ஏதுவாக, கழிப்பறைகளில் இருந்தே, வெளியே உள்ள தொட்டியில் போடவும் வசதி செய்யப்படும். அதே பகுதியில், "நாப்கின்'களை எரிக்கவும் வழிவகை செய்யப்பட உள்ளது.

ஒவ்வொரு கழிப்பிடத்துக்கும், போதுமான அளவு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தண்ணீர் கிடைக்கும் வகையில், குழாய்கள் அமைக்கப்படும். பாதாள சாக்கடை கால்வாய் வசதியுள்ள பகுதிகளில், "நம்ம டாய்லெட்' கழிவுகள் அதன் மூலம் வெளியேற்றப்படும். பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளில், நான்கு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சுத்திகரிப்பு மையம் ஏற்படுத்தி, கழிவுநீரை அங்குள்ள செடிகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி செயற்பொறியாளர் தமிழ்செல்வன் கூறியதாவது:

திருப்பூர் மாநகராட்சியை நவீனமாக்கும் வகையில், "நம்ம டாய்லெட்' திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதியில் "நம்ம டாய்லெட்' அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது; பொதுமக்களிடம் அதிக வரவேற்பையும் பெற்றுள்ளது. இதேபோல், திருப்பூரில் ஏழு இடங்களில் சுகாதார வளாகம், 11 இடங்களில் கழிப்பிட வசதி, 3.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட உள்ளது.

மேலும், 41 இடங்களில் "நம்ம டாய்லெட்' என்ற பொதுக்கழிப்பிடத்தை அமைக்க, தமிழக அரசிடம் 6.50 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தொடர்ந்து, பழைய பஸ் ஸ்டாண்டில் "இ-டாய்லெட்' அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரண்டு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் காசுகளை செலுத்தினால் மட்டும் கதவு திறப்பது உள்ளிட்ட வசதிகளுடன் "இ-டாய்லெட்' அமைக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

பழைய பஸ் ஸ்டாண்டில் "இ-டாய்லெட்' அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரண்டு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் காசுகளை செலுத்தினால் மட்டும் கதவு திறப்பது உள்ளிட்ட வசதிகளுடன் "இ-டாய்லெட்' அமைக்கப்படும்.