Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: நகர்மன்றத் தலைவர்

Print PDF

தினமணி             27.09.2013

கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: நகர்மன்றத் தலைவர்

கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் கழிப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, நகர்மன்றக் கூட்டத்தில் அதன் தலைவர்(பொறுப்பு) எட்வர்டு தெரிவித்தார்.

  கொடைக்கானல் நகர்மன்றக் கூட்டம், தலைவர் (பொறுப்பு) எட்வர்ட் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார்.

  கூட்டத்தில், கொடைக்கானல் சுற்றுலா இடமான குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் கழிப்பறைகள் இல்லாத காரணத்தால், சுற்றுலாப் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால், சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு தயங்குகின்றனர் என உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.  அதையடுத்து, கொடைக்கானல் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களில் கழிப்பறைகள் கட்ட வேண்டும். ஏரிச்சாலை உள்ளிட்ட சில இடங்களில் உள்ள கழிப்பறைகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தினர்.

  இதற்கு, அனைத்து சுற்றுலா இடங்களிலும் கழிப்பறைகள் கட்டுவதற்கு தற்போது இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, மதிப்பீடு ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.விரைவில், சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் கழிப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் பதிலளித்தார்.

  தொடர்ந்து, ஏரிச்சாலைப் பகுதியில் உள்ள 5-டி தியேட்டர் நிலை தற்போது எவ்வாறு உள்ளது என உறுப்பினர் கேட்டனர். 5-டி தியேட்டர் சம்பந்தமான வழக்கு  நீதிமன்றத்தில் உள்ளது. எனவே, அது குறித்து எந்த உறுப்பினர்களும் பேசவேண்டாம் என தலைவர் அறிவுறுத்தினார்.  பின்னர், கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பணம் கொடுக்கப்படவில்லை. இதனால், வீடு கட்டியவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என உறுப்பினர் ஒருவர் புகார் தெரிவித்தார்.

  கொடைக்கானலிலுள்ள 24 வார்டுகளிலும் கட்டப்பட்டுள்ள தொகுப்பு வீடுகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. அரசு கொடுக்கப்பட்டுள்ள விதிகளுக்குள்பட்டு தொகுப்பு வீடு கட்டியுள்ளவர்களுக்கு தொகை வழங்கப்படும் என்றார் தலைவர். மேலும், பல இடங்களில் எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. சிலர் பணம் பெற்றுக்கொண்டு வீடு கட்டாமல் இருந்து வருவதாகத் தெரிகிறது என உறுப்பினர் தெரிவித்தார்.  இதற்கு, 20 தொகுப்பு வீடுகள் கட்டப்படாமல் உள்ளதாக தற்போது கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

  தொடர்ந்து, இப்பணி நடைபெற்று வருகிறது. பொது மக்கள் பாதிக்காத வகையில், வீடு கட்டுவதற்கு தொகை வழங்கப்படும் என பதிலளித்தார் ஆணையர்.