Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தலைதூக்கும் டெங்கு, சிக்குன்-குன்யா...தடுப்பு பணிகளில் சுகாதாரத் துறை தீவிரம்

Print PDF

தினமலர்            01.10.2013  

தலைதூக்கும் டெங்கு, சிக்குன்-குன்யா...தடுப்பு பணிகளில் சுகாதாரத் துறை தீவிரம்


டெங்கு, சிக்குன்-குன்யா காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை, சுகாதாரத் துறை முடுக்கி விட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், மழைக் காலத்தின்போது, மலேரியா, டெங்கு, சிக்குன்-குன்யா போன்ற காய்ச்சல்கள், கொசுக்கள் மூலம் வேகமாக பரவுவது வழக்கம்.

மழை காலத்தில், அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்குவதால், கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்கும். இந்த காலக்கட்டத்தில், அதாவது, செப்டம்பரில் ஆரம்பித்து, ஜனவரி வரை, ஐந்து மாதங்களுக்கு காய்ச்சல் பரவுவது அதிகமாக இருக்கும்.

தொடர்ந்து மழை பெய்தால், கொசுக்களின் முட்டைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும். ஓடும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகாது. மழை விட்டுவிட்டு பெய்யும்போது, ஆங்காங்கே தண்ணீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகும்.

கடந்த சில மாதங்களாக, மழை பெய்வதும், நிற்பதுமாக இருப்பதால், கொசுக்கள் உற்பத்தி தற்போது அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக, புதுச்சேரி, காரைக்காலில் டெங்கு, சிக்குன்-குன்யா பாதிப்பு தலைதூக்கி உள்ளது.

கடந்த மாதத்தில் மட்டும், காரைக்காலில் ஒருவரும், புதுச்சேரியில் 16 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை, 114 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இவர்கள் அனைவரும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து, வீடு திரும்பி விட்டனர். உயிரிழப்புகள் ஏதுமில்லை.

கடந்தாண்டு, 1350 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். இதில், 2 பேர் உயிரிழந்தனர்.அதுபோல, சிக்குன்-குன்யாவில், இந்தாண்டு இதுவரை, 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு, 6 பேர் பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து, கொசு மற்றும் பூச்சுகளால் பரவும் தேசிய நோய் தடுப்புத் திட்டத்தின் உதவி இயக்குனர் டாக்டர் காளிமுத்து கூறும்போது, "மலேரியா, டெங்கு, சிக்குன்-குன்யா போன்றவை, கொசுக்கள் மூலமாக பரவுகின்றன. வீடுகளிலும், வீடுகளை சுற்றியுள்ள இடங்களிலும் தண்ணீர் தேங்குவதால், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன.

எனவே, தண்ணீர் தேங்குவதை தடுப்பது தொடர்பாக, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு, நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளோம்.

விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் ஒன்னரை லட்சம் அச்சடித்து பொதுமக்களிடம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஓட்டல், டீக்கடை, வல்கனைசிங் கடை, சிமென்ட் ஜாலிக்கள் செய்யும் கடை, பழைய பொருட்கள் விற்கும் கடை, இளநீர் வியாபாரம் செய்யும் இடங்களில் மழை நீர் தேங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இவர்களை அழைத்து விரைவில் கூட்டம் நடத்த உள்ளோம்.

மேலும், பொதுப்பணி, உள்ளாட்சி, கல்வி ஆகிய துறையினருடன், ஒருங்கிணைந்து, கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து, ஆரம்பக்கட்ட கூட்டம் நடத்தி உள்ளோம்.

அரசு பொது மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஜிப்மர் ஆகிய இடங்களில், டெங்கு காய்ச்சலுக்கான ரத்தப் பரிசோதனை மையங்கள் அமைந்துள்ளன. இங்கு அனைத்து உபகரணங்கள், மருந்துகள் தேவையான அளவில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும், சிறப்பு பணிக் குழு அமைக்கப்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தினசரி சென்று, காய்ச்சல் பாதிப்பு குறித்து ஊழிர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல், அதிவேக சிறப்பு பணிக் குழுவும் அமைக்கப்பட்டு, நிலைமையை கண்காணித்து வருகிறோம்.

தற்போது, நிலைமை கட்டுக்குள் உள்ளதால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. அதேசமயம், விழிப்புணர்வுடன் இருந்து, கொசுக்கள் உற்பத்தியாகாமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்' என்றார்.