Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டெங்குவை ஒழிக்க துரித நடவடிக்கை மேயர் தகவல்

Print PDF

தினகரன்           29.10.2013

டெங்குவை ஒழிக்க துரித நடவடிக்கை மேயர் தகவல்

திருச்சி, : திருச்சி மாநகரில் எங்கேனும் டெங்கு காய்ச்சல் நோயின் அறிகுறிகள் தென்பட்டால் போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேயர் ஜெயா கூறினார்.

திருச்சி மாநகராட்சியில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 15மனுக்கள் பெறப்பட்டன. திருச்சி மாநகராட்சியில் நலத்திட்டங்களை நிறைவேற்றும் வகையில், வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடந்து வருகிறது. இதில் பொதுக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் ஜெயா தலைமை வகித்து, பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். பொது மக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சாலை மேம்பாடு செய்யவும், பழுதடைந்த தெருவிளக்குகளை சரி செய்யவும், கழிவறைகள் மற்றும் பூங்காக்கள் பராமரிக்க கோரியும் மனுக்கள் பெறப்பட்டன. இதில் 47வது வார்டு பகுதி பீமநகர் கூனி பஜார் பகுதியில் உள்ளது புனித செபஸ்தியார் கோயில். 120 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயிலில் தற்போது புனரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இதை அப்பகுதியில் குடியிருக்கும் சிலர் தடுத்து வருகின்றனர். எனவே கோயில் திருப்பணி சிறப்பாக நடைபெற மாநகராட்சி ஒத்துழைப்பு தர வேண்டும் எனக்கூறி கவுன்சிலர் துர்காதேவி தலைமையில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் மேயரிடம் புகார் மனு அளித்தனர். பின்னர் மேயர் ஜெயா பேசுகையில், மாநகர பகுதியில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தெரிய வந்தால் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோட்ட உதவி ஆணையர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் கொசு ஒழிப்பு நடவடிக்கையில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றார். மாநகராட்சி ஆணையர் தண்டபாணி, துணை மேயர் மரியம் ஆசிக், நகர் நல அலுவலர் மாரியப்பன், செயற் பொறியாளர்கள் அருணாச்சலம், நாகேஸ், உதவி ஆணையர்கள் பாஸ்கர், பிரபுகுமார் ஜோசப், ரங்கராஜன், தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.