Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை...தீவிரம்! டெங்கு பாதித்த பகுதியில் சிறப்பு முகாம்

Print PDF

தினமலர்           07.11.2013

தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை...தீவிரம்! டெங்கு பாதித்த பகுதியில் சிறப்பு முகாம்

நாமக்கல்: டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதியில், இரண்டு மருத்துவக்குழுவினர் முகாமிட்டு, தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாமக்கல் - பரமத்தி சாலை, சிப்காட் பின்புறம் உள்ள கொங்கு நகர் மற்றும் கணபதி நகரில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பெரியப்பட்டி பஞ்சாயத்தில் இருந்து இப்பகுதி, தற்போது, நகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

இப்பகுதியில், சாலை வசதி, சாக்கடை வசதி ஏற்படுத்தித்தரவில்லை. சக்கடை கழிவுநீர் சாலையில் வெளியேறி வருகிறது. மேலும், துர்நாற்றம் வீசுவதால், அங்கு குடியிருக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

கடந்த மாதம், ஒரே வீட்டில் இரண்டு குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். மேலும், சக்திவேல் - மலர் தம்பதியினரின், 12 வயது மகளும் டெங்குவால் பாதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் இறந்தார்.

டெங்கு பாதிப்பு குறித்து பரிசோதனை செய்ய, எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சொந்தமான நடமாடும் மருத்துவமனை ஆம்புலன்ஸ் சென்ற போது, அப்பகுதி மக்கள், ஆம்புலன்ஸை முற்றுகையிட்டனர்.

இந்நிலையில், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜெமினி தலைமையில், மருத்துவர் குழுவினர், டெங்கு காய்ச்சல் பாதித்த பகுதியான, கொங்குநகர், கணபதி நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில், இரண்டு குழுவினர் தனித்தனியாக முகாமிட்டு, அனைத்து குழந்தைகளையும் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

மேலும், ஒவ்வொரு வீடாக சென்று காய்ச்சால் பாதிக்கப்பட்டவர்கள், எவ்வகையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டறிந்து, அதற்கேற்ப மருந்து, மாத்திரை வழங்கப்பட்டது.

மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜெமினி கூறியதாவது:

டெங்கு பரவுவதை தடுக்க, வீட்டை சுத்தமாக பராமரிக்க வேண்டும். சாக்கடையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தேவையில்லாத பொருட்களில் மழை நீர் தேங்கி இருப்பதை வெளியேற்ற வேண்டும். மழைநீர் வீடுகளில் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குடிநீரில் புளோரிநேசன் செய்ய வேண்டும் என, பஞ்சாயத்து, நகராட்சி நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இடத்தில் நகராட்சிப் பணியாளர்கள் சென்று சாலையை சுத்தம் செய்தும், சாக்கடை நீரை உறிஞ்சி எடுத்தும் வெளியேற்றி உள்ளனர்.

பொதுமக்கள் லேசான காய்ச்சல் அடித்தாலே, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.