Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனைத்து பேரூராட்சிகளிலும் உடல் பருமனை குறைக்க உடற்பயிற்சி கூடங்கள்

Print PDF

தினகரன்            08.11.2013

அனைத்து பேரூராட்சிகளிலும் உடல் பருமனை குறைக்க உடற்பயிற்சி கூடங்கள்

ஓமலூர், : உடல் பருமனைக் குறைக்கவும், திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வகையிலும், அனைத்து பேரூராட்சிகளிலும் நவீன உடற்பயிற்சி கூடங்கள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

வெளிநாடுகளை போல், நொறுக்குத்தீனி கலாசாரம் நம்மிடையே வேகமாக பரவி வருகிறது. இதனால் நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் பிரச்னை ஏற்படுகிறது. இது போன்ற உடலியல் பிரச்னைகளுக்குத் தீர்வு காண நாள்தோறும் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது நடைபயிற்சி அவசியம் மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். உடற்பயிற்சியின் அவசியத்தை பொதுமக்கள் உணரத் தொடங்கியுள்ளதால் தனியார் உடற்பயிற்சி கூடங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

தனியார் பயிற்சி மையங்களுக்கு கட்டணம் செலுத்தி செல்ல முடியாத பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், விளையாட்டு வீரர்களை கிராமங்களிலிருந்து உருவாக்கும் வகையிலும் தமிழக அரசு நவீன உடற்பயிற்சிக் கூடங்களை உருவாக்க முடிவு செய்துள்ளது. இதனையொட்டி, முதலமைச்சரின் விளையாட்டுத்துறை திட்டங்கள் என்ற தலைப்பில் அனைத்து பேரூராட்சி பகுதிகளிலும் நவீன உடற்பயிற்சி கூடத்தை அமைக்க பேரூராட்சிகள் இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.

இதன்படி ஒவ்வொரு பேரூராட்சியிலும் உடற்பயிற்சிக்கூடம் மற்றும் அதற்கான கருவிகள் வாங்குவதற்காக தலா ரூ.10 லட்சம் என்ற அளவில் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் அயோத்தியாப்பட்டணம், கன்னங்குறிச்சி, கொளத்தூர், கொங்கணாபுரம், மேச்சேரி, பி.என்.பட்டி, பி.என்.பாளையம், சங்ககிரி, தாரமங்கலம், வாழப்பாடி, வீரக்கல்புதூர், ஜலகண்டாபுரம், இடங்கணசாலை, இளம்பிள்ளை, கெங்கவல்லி, கருப்பூர், மல்லூர், ஏத்தாப்பூர் ஆகிய 18 பேரூராட்சிகளில் தலா ரூ.10 லட்சம் மதிப்பில் நவீன உடற்பயிற்சிக்கூடம் அமைக்க கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

இதே போன்று நாமக்கல் மாவட்டத்தில் மல்லசமுத்திரம், மோகனூர், நாமகிரிப்பேட்டை, படவீடு, பரமத்தி, வேலூர், அத்தனூர், எருமப்பட்டி, பிள்ளனூர், சீராப்பள்ளி என 10 பேரூராட்சிகளில் நவீன உடற்பயிற்சி க்கூடம் அமையவுள்ளது.