Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிருங்கள்

Print PDF

தினமலர்         20.11.2013 

திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிருங்கள்

திருப்பூர் :நவ., 19ம் தேதி, உலக கழிப்பறை தினமாக கருதப்படுகிறது; அந்நாளில், கழிப்பறையை தூய்மையாக பராமரிப்பது குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

பெரிச்சிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், உலக கழிப்பறை தின விழா நேற்று நடந்தது. பள்ளி வளாகத்தில் இருந்த கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டன. அதன்பின், கழிப்பறையை தூய்மையாக பராமரிப்பது குறித்து கருத்தரங்கு நடந்தது. மாநகராட்சி நான்காவது மண்டல உதவி கமிஷனர் செல்வநாயகம் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஞானாம்பாள் வரவேற்றார். நகர்நல அலுவலர் செல்வக்குமார் பேசுகையில்,"" திறந்தவெளியில் மலம் கழிப்பதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

வயிற்றுபோக்கு, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் பரவுகின்றன. கழிப்பறையை தூய்மையாக பராமரிக்க வேண்டும். கழிப்பறையை பயன்படுத்திய பின், கை மற்றும் கால்களை சோப்பு போட்டு கழுவ வேண்டும். வாரம் ஒருமுறை நகம் நறுக்க வேண்டும். ""மாதம் ஒருமுறை முடித்திருத்தம் செய்துகொள்ள வேண்டும். கால்களில், காலணி அணியாமல் வெளியிடங்களுக்கு செல்லக்கூடாது,'' என்றார்.ஆசிரியர் கனகராஜா நன்றி கூறினார்.விழிப்புணர்வு ஊர்வலம் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கழிப்பிடங்கள் நேற்று சுத்தம் செய்யப்பட்டு, பொதுமக்களிடம் உலக கழிப்பிட தின விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கழிப்பிட பயன்பாடு மற்றும் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.மூன்றாவது மண்டல அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலத்தை, இரண்டாவது மண்டல தலைவர் ஜான் துவக்கி வைத்தார். நகர் நல அலுவலர் செல்வக்குமார், மாநகர பொறியாளர் ரவி, உதவி கமிஷனர்கள் கண்ணன், செல்வநாயகம் உட்பட அதிகாரிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். விழிப்புணர்வு தட்டிகளை கையில் ஏந்தியபடி, நல்லூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர் சென்றனர். மண்டல அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலம், காங்கயம் மெயின் ரோட்டில் ராக்கியாபாளையம் பிரிவு வரை சென்றது. அதன்பின், பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகிக்கப்பட்டது.