Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

‘தட்டான் பூச்சிகளின் அழிவே டெங்கு காய்ச்சல் பரவ காரணம்’ மாணவிகளின் ஆய்வு அறிக்கையில் தகவல்

Print PDF

தினத்தந்தி           21.11.2013

‘தட்டான் பூச்சிகளின் அழிவே டெங்கு காய்ச்சல் பரவ காரணம்’ மாணவிகளின் ஆய்வு அறிக்கையில் தகவல்

‘‘தட்டான் பூச்சிகளின் அழிவே மனிதர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு காரணம்’’ என்று மாணவிகள் தங்கள் ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர்.

மாணவிகள் ஆய்வு

மதுரை மாவட்டம் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 9–ம் வகுப்பு மாணவிகள் கவுசல்யா, சாருமதி, மதுமிதா, பிரவீணா, பிரியதர்ஷினி, ருத்ரா, பிரியா, பாண்டிமாதேவி, ஆதித்யா, ஆர்த்தி ஆகியோர், ஆசிரியர் சூர்யகுமார் தலைமையில் கடந்த மாதம் கொசுப்பெருக்கம் தொடர்பாக, ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

அதன்படி, கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் உயிர் பலிகள் அதிகம் நிகழ்ந்த மேலூரிலும், அதன் சுற்றுப்புற கிராமங்களான வல்லாளப்பட்டி, முனியாண்டிபட்டி, மங்களநகர், மல்லிகைநகர், நடுப்பட்டி, தாமரைப்பட்டி, பதினெட்டாங்குடி ஆகிய கிராமங்களிலும் கள ஆய்வு நடத்தினர். அப்போது, டாக்டர்கள், பொறியாளர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், கிராமமக்கள், கல்லூரி மாணவர்கள் என்று பலதரப்பினரிடம் அவர்கள் கருத்தாய்வு நடத்தினர்.

‘தட்டானின் அழிவு, கொசுக்களின் பெருக்கம்’

பின்பு, தங்களது ஆய்வறிக்கையை மாவட்ட நிர்வாகத்திற்கும், மேலூர் தாசில்தாருக்கும் அளித்தனர். அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

‘‘தட்டான் பூச்சி இனங்கள் கொசுக்களை உணவாக உட்கொள்பவை. ஊசித்தட்டான் போன்ற சிலவகை தட்டான்கள், கொசு முட்டைகளை உணவாக உட்கொண்டு வாழ்பவை.

விவசாய நிலங்களில் சேதி உரங்கள் பயன்படுத்தப்படுவதாலும், செல்போன் டவர்களின் கதிர்வீச்சு, வறட்சி நிலை ஆகியவற்றின் காரணமாகவும் இந்த தட்டான் இனங்கள் அழிந்து வருகின்றன.

இதனால் இயற்கை சமநிலையும், உயிரிப் பல்வகைமையும் (பயோ டைவர்சிட்டி) பாதிக்கப்பட்டு தட்டான் பூச்சி இனங்கள் அழிந்து வருகின்றன. இதனால் கொசுக்களின் உற்பத்தி அதிகமாகி டெங்கு கொசுக்கள் ஊருக்குள் பரவுகின்றன.

டெங்கு கொசுக்கள்

மேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் தோண்டப்பட்ட கிரானைட் பள்ளங்களில் தேங்கும் நீரில் இருந்து ‘ ‘ஏடிஸ், எஜிப்டி‘ எனப்படும் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இந்த பாறைக்குழிகள் டெங்குவை பரப்பும் கொசு உற்பத்தி மையங்களாக திகழ்கின்றன. இதனால் தான் மேலூர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் ஏற்படுகிறது.

இவற்றை தடுக்க தட்டான்பூச்சி இனங்கள் பெருகிட, அதற்கான வழி வகைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். விவசாயத்திற்கு ரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை உரத்தை பயன்படுத்தலாம். மேலும் அறுவடை முடிந்த வயல்களில் உள்ள தோகைகளை தீயிட்டுக் கொளுத்துவது, குப்பைக்கூளங்கள், பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பது, போன்ற வெப்ப நிலைகளை உருவாக்குவதால் தட்டான் பூச்சி இனங்கள் இனப்பெருக்கம் குறைந்து அழிகின்றன.

கிரானைட் கற்கள் தோண்டப்பட்ட பள்ளங்களில் மீன்களை வளர்த்தால் கொசுப்பெருக்கம் குறையும்.’’

இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆய்வில் ஈடுபட்ட மாணவிகளையும், ஆசிரியரையும் தலைமை ஆசிரியை டெய்சி நிர்மலா ராணி, மேலூர் தாசில்தார் ஆகியோர் பாராட்டினர்.