Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தனியார் மயமாகும் 18 வார்டு துப்புரவு பணி: மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல்

Print PDF

தினமலர்             28.11.2013

தனியார் மயமாகும் 18 வார்டு துப்புரவு பணி: மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல்

திருச்சி: மாநகராட்சி பகுதியில், 18 வார்டுகளின் துப்புரவு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க, திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

திருச்சி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று காலை மேயர் ஜெயா தலைமையில் நடந்தது. கமிஷனர் தண்டபாணி, துணைமேயர் ஆசிக்மீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் முத்துச்செல்வம் பேசுகையில், ""தெருக்கள் தோறும் வாகனத்தில் எடுத்து சென்று கொசு மருந்து அடிக்கும் எந்திரம், ஒரு ஆண்டாக பயன்படுத்தாமல் உள்ளது. சிறிய எந்திரங்களால் வார்டு முழு பகுதியிலும் கொசு மருந்து அடிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்,'' என்றார்.

கமிஷனர் தண்டபாணி பேசுகையில், ""பெரிய எந்திரம் பழுதடைந்துள்ளது. அதற்கு பதிலாக. இரண்டு புதிய பெரிய எந்திரங்கள் வாங்கப்படும். அத்தோடு சிறிய எந்திரம் மூலம் வீடுவீடாக சென்று மருந்து அடித்ததால், பெரிய இயந்திரம் தேவையில்லாமல் போய்விட்டது,'' என்றார்.

தி.மு.க., கவுன்சிலர் அன்பழகன் பேசுகையில், ""கொசு அடிக்கும் எந்இயந்திரத்தை காலம் தாழ்த்தாமல், நான்கு கோட்டத்திற்கு தலா ஒரு இந்திரம் என போர்க்கால அடிப்படையில் உடனடியாக வாங்க வேண்டும்,'' என்றார்.

தி.மு.க., கவுன்சிலர் கவிதா பேசுகையில்,"" எனது வார்டில் சேதமடைந்துள்ள தேவராய நகர், சக்தி விநாயகர் கோவில் தெரு உள்ளிட்ட சாலைகளை புதுப்பித்து வழங்கும்படி, இரண்டாண்டாக கோரிக்கை விடுத்துள்ளேன். ஆனால் இந்த பணிகள் நிராகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்கிறேன்,'' என்று கூறிவிட்டு, அவர் உடனடியாக கூட்டத்திலிருந்து வெளியேறினார்.

திருச்சி மாநகரில் உள்ள, 7, 8, 9, 28, 29, 61, 62, 64, 35 முதல், 38 வரை, 39, 63, 65, 40, 41, 45 ஆகிய, 18 வார்டுகள், சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட், சத்திரம் பஸ்ஸ்டாண்ட், காந்திமார்க்கெட் ஆகிய பகுதிகளின் துப்புரவு பணிகளை, ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கும் தீர்மானத்துக்கு, காங்கி., கவுன்சிலர் ஹேமா, அ.தி.மு.க., கவுன்சிலர் சுதாகர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கமிஷனர் தண்டபாணி பேசுகையில், ""துப்புரவு பணியாளர் பற்றாக்குறை காரணமாக தனியார் மயத்தை தவிர்க்க முடியவில்லை. தனியார் மயம் என்றாலும், மாநகராட்சி நிர்வாக அமைப்பின் பணி, அந்த பகுதிகளில் தொடர்ந்து நடக்கும். அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தான் தீர்மானம் ஒப்புதலுக்கு வந்துள்ளது,'' என்றார். இதையடுத்து அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட் மற்றும் மேலப்புதூர் ஆகிய இடங்களில் சாலையை கடக்க நடை மேம்பாலம் அமைக்க தேவையான பூர்வாங்க நடவடிக்கை மேற்கொள்ளவும், கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.