Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருப்பூர் தடுப்பூசி போட்ட 6 மாதங்களுக்குள் கால்நடைகளுக்கு மீண்டும் தடுப்பூசி போடக்கூடாது கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் தகவல்

Print PDF

தினத்தந்தி          30.11.2013

திருப்பூர் தடுப்பூசி போட்ட 6 மாதங்களுக்குள் கால்நடைகளுக்கு மீண்டும் தடுப்பூசி போடக்கூடாது கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் தகவல்

கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்ட 6 மாதங்களுக்குள் மீண்டும் தடுப்பூசி போடக்கூடாது என தாராபுரம் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் சந்திரசேகரன் தெரிவித்தார். காங்கயம் மற்றும் தாராபுரம் தாலுகாவில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் கால்நடைகள் உள்ளன. இதில் 92 சதவீத கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி கடந்த 6 மாதத்திற்கு முன்பு போடப்பட்டது. இந்த நிலையில் தடுப்பூசி போட்ட கால்நடைகளுக்கு மீண்டும் தடுப்பூசி போடுவதாக தகவல் வந்தது.

இது குறித்து தாராபுரம் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் சந்திரசேகரன் கூறியதாவது:–

மருத்துவம்

கோமாரி நோய் தாக்கிய கால்நடைகளை உடனடியாக கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு உடனடியாக மருத்துவம் செய்ய வேண்டும். நோய்க் கிளர்ச்சி ஏற்பட்டுள்ள பகுதியில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவது தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் ஏற்கனவே தடுப்பூசி போட்டு 6 மாதம் நிறைவடையாத நிலையில் மீண்டும் தடுப்பூசி போட்டால் ஏற்கனவே போடப்பட்ட மருந்து வீரியம் குறைந்து விடும். எனவே தடுப்பூசி போட்ட 6 மாத காலத்துக்குள் வேறு ஊசி போட வேண்டாம்.

நோய் தடுப்பு மருந்து

நோய் தாக்கிய கால்நடைகளின் மாதிரி பொருட்கள் சேகரித்து ஆய்வுக்காக ராணிப்பேட்டை கால்நடை நோய்த்தடுப்பு மருந்து நிலையத்திற்கு அனுப்ப வேண்டும். நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் வாய் மற்றும் கால்களை ஒரு லிட்டர் தண்ணீரில் 1 சதவீத பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலை கரைத்து நன்றாக கழுவ வேண்டும். பின்னர் வாய் மற்றும் நாக்கில் கிளிசரின் மற்றும் போரிக் ஆசிட் பவுடர் கலவையை நன்றாக தடவவேண்டும். கால்குளம்புகளில் வேப்பெண்ணையை தடவ வேண்டும். நோய் தாக்கிய கால்நடைகளை பராமரிக்கும் நபர் மற்ற கால்நடைகளை அணுகுதல் கூடாது, நோயால் பாதித்த கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்புதல் கூடாது. கோமாரி நோயின் அறிகுறிகள் காணப்பட்டால், கால்நடை வளர்ப்போர் உடனடியாக கால்நடை உதவி மருத்துவருக்கு தகவல் அளிக்க வேண்டும். 10 சதவீத சலவை சோடா கரைசல் கொண்டு தொழுவம் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்ய வேண்டும்.

விற்பனை செய்யக்கூடாது

கால்நடைகளை பராமரிப்பவர்கள் மற்றும் அவர்களது உடமைகளை 0.2 சதவீதம் சிட்ரிக் ஆசிட் கரைசல் கொண்டு கிருமிநாசம் செய்ய வேண்டும். கைகளை சோப்புக் கொண்டு ஒவ்வொரு முறையும் நன்றாக கழுவ வேண்டும். நோய் பாதித்த கால்நடைகளை பொது இடங்களுக்கு கொண்டு வருவதோடு, அவற்றை விற்பனை செய்யவோ, வாங்குவதோ தவிர்க்கப்பட வேண்டும். இளங்கன்றுகள் நோய் பாதித்த தாயிடம் பால் அருந்த அனுமதிக்கக் கூடாது. மாறாக கன்றுகளுக்கு பாலை கொதிக்க வைத்து பின், குளிர்வித்து கொடுக்கலாம். தொழுவத்தை சுண்ணாம்பு கொண்டு வெள்ளையடிக்க வேண்டும்.

கேழ்வரகு

மாடுகள் குடிக்கும் நீரில் 100 லிட்டருக்கு 5 கிராமம் பிளீச்சிங் பவுடரை கலந்து கொடுத்தல் நலம், பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு கேழ்வரகு, கூழுடன் தேன் கலந்து கொடுத்தால் விரைவில் குணமடையும்.  இறந்த கால்நடைகளை 6 அடி ஆழம் குழி வெட்டி, அதில் சடலத்தின் கீழும் மேலும் கண்ணாம்பு தூவி, பின் மண் கொண்டு நன்றாக மூட வேண்டும். கால்நடைகளை புதைக்கும் இடம் நீர் தேங்கும் இடமாகவோ, பயன்பாட்டிற்கான நீராதாரத்திற்கு அருகிலோ இருக்கக் கூடாது. கால்நடைகளுக்கான தீவனம் மற்றும் படுக்கை பொருட்களை 10 சதவீத பார்மலின் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். 4 மாத வயதுடைய கன்றுகள் நீங்கலாக அனைத்து கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் (சினை மாடுகள் உட்பட). கன்றுகள் முதல் முறையாக தடுப்பூசி போடப்படும், கன்றுகளுக்கு 21 நாட்களுக்கு பின் மீண்டும் ஒருமுறை தடுப்பூசி போட வேண்டும், அனைத்து கால்நடைகளுக்கும் 6 மாதங்களுக்கு ஒரு முறை தடுப்பூசி போட வேண்டும், பக்கத்து கிராமங்களில் நோய் ஏற்பட்டுள்ள விவரத்தை அனைத்து கால்நடை வளர்ப்போருக்கும் தெரியப்படுத்த வேண்டும், நோய் காலங்களில் கால்நடைகள் விற்பதையும் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.