Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னையில் ரூ. 8½ கோடி செலவில் 5 லட்சம் பேருக்கு கொசு வலை: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

மாலை மலர்                28.12.2013

சென்னையில் ரூ. 8½ கோடி செலவில் 5 லட்சம் பேருக்கு கொசு வலை: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
 
சென்னையில் ரூ. 8½ கோடி செலவில் 5 லட்சம் பேருக்கு கொசு வலை: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை, டிச. 28 - சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் பெஞ்சமின், கமிஷனர் விக்ரம் கபூர் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி கூறியதாவது:–

சென்னை மாநகரில் நீர்வழி தடங்களில் வசிக்கும் பொதுமக்கள் கொசு கடியில் இருந்து தப்பிக்கவும், கொசுக்களால் பரவும் நோய்களில் இருந்து அவர்களை பாதுகாக்கவும் ஏற்கனவே 5 லட்சம் கொசு வலைகள் விநியோகப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக 5 லட்சம் கொசுவலைகள் கொள்முதல் செய்யப்பட்டு 5 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது.

ஒரு கொசுவலையின் விலை ரூ. 169 வீதம் ரூ. 8 கோடியே 45 லட்சம் செலவில் கொள்முதல் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கொசு வலைகள் மண்டலம் 1 முதல் 15 வரை உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்படும். 20 கிலோ இலவச அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொசு வலைகள் வழங்கப்படும். கொசு வலை வழங்கியதற்கான முத்திரை குடும்ப அட்டைகளில் குறிப்பிடப்படும்.

குடும்ப அட்டை இல்லாத நீர்வழி பாதை ஓரங்களில் வசிப்பவர்களுக்கும் கொசு வலை வழங்கப்படும்.

மேலும் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள், விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ–மாணவிகள், ஆதரவற்றோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கும் கொசு வலைகள் இலவசமாக வழங்கப்படும்.

கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி சிறப்பு தீர்மானங்களை கொண்டு வந்து அவற்றின் மீது பேசியதாவது:–

முதல்–அமைச்சர் உத்தரவுப்படி சென்னையில் ஆயிரம் இடங்களில் மாபெரும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கடந்த 5–ந்தேதி முதல் 9–ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெற்ற இந்த முகாமில் நோய்கள் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல் நடைபெற்றது.

இந்த முகாம்கள் மூலம் 4 லட்சத்து 30 ஆயிரத்து 993 பேர் பயன் அடைந்தனர். இதற்காக ரூ.3 கோடி மாநகராட்சி செலவிட்டு உள்ளது.

மாநகராட்சியின் பொது சுகாதார துறையின் மேலான நடவடிக்கை மூலம் மலேரியா, டெங்கு காய்ச்சல்கள் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன.

கடந்த 2005–ம் ஆண்டு 25 ஆயிரத்து 153 பேருக்கு மலேரியா பாதிப்பு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 4665 ஆக குறைந்து உள்ளது. 131 பேருக்கு மட்டுமே டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்காடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்கு பாராட்டு தெரிவித்து சிறப்பு தீர்மானத்தை கொண்டு வந்து மேயர் சைதை துரைசாமி பேசினார். அப்போது அவர் அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜா 78 ஆயிரத்து 116 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 4500 பேர் வாக்களிக்க விரும்பவில்லை என பதிவு செய்து உள்ளனர்.

இதன் மூலம் அ.தி.மு.க.வுக்கு மாற்று தி.மு.க. அல்ல என்பதை மக்கள் உணர்த்தி இருக்கிறார்கள். ஏற்காடு மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதோடு முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இந்த மன்றம் பாராட்டு தெரிவித்து கொள்கிறது என்று கூறினார்.

இதை தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.