Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதிய பல், கால்நடை மருத்துவமனைகள் ஒரு மாதத்தில் தொடங்கப்படும்: மேயர் தகவல்

Print PDF

தினமணி 2.11.2009

புதிய பல், கால்நடை மருத்துவமனைகள் ஒரு மாதத்தில் தொடங்கப்படும்: மேயர் தகவல்

சிறப்பு மருத்துவ முகாமைப் பார்வையிடுகிறார் மேயர் மா. சுப்பிரமணியன்.

சென்னை, நவ. 1: வட சென்னை, தென் சென்னை பகுதிகளில் புதிய பல் மருத்துவமனை மற்றும் கால்நடை மருத்துவமனைகள் ஒரு மாதத்தில் தொடங்கப்படும் என்று மேயர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

உள்ளாட்சிகள் தின விழா சென்னை மாநகராட்சி சார்பில் சைதாப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற மேயர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:

சென்னை மாநகராட்சி சார்பில், 74 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் ரத்தம், சிறுநீர், சர்க்கரை நோய் பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் அடுத்த கட்டமாக தண்டையார்பேட்டை மொட்டை கார்டன் பகுதியிலும், சைதாப்பேட்டை சிஐடி நகரிலும் புதிய பல் மருத்துவமனைகள் மாநகராட்சி சார்பில் அடுத்த ஒரு மாதத்தில் தொடங்கப்பட உள்ளன.

இதுபோல் வட சென்னை வார்டு 51-லும், தென் சென்னை வார்டு 107-லும் புதிய கால்நடை மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளன.

ஜோன்ஸ் சாலையில் ரூ. 4.33 கோடியில் அமைக்கப்பட்டு வரும் வாகன சுரங்கப் பாதையும், ஆலந்தூர் சாலையில் ரூ. 6 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் வாகனப் பாலமும் ஒரு மாத காலத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் என்றார் மேயர்.

விழாவில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் 47 பயனாளிகளுக்கு தலா ரூ. 20 ஆயிரம் வீதம், ரூ. 9.40 லட்சம் வழங்கப்பட்டது. நகர்ப்புற வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு மானியமாக ரூ. 2.34 லட்சம் வழங்கப்பட்டது.