Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேனி பகுதியில் சிக்குன் குனியா தடுப்பு நடவடிக்கை சுகாதாரமற்ற உணவகங்களை மூட உத்தரவு

Print PDF

தினமணி 4.11.2009

தேனி பகுதியில் சிக்குன் குனியா தடுப்பு நடவடிக்கை சுகாதாரமற்ற உணவகங்களை மூட உத்தரவு

தேனி, நவ. 3: தேனி பகுதியில் சிக்குன் குனியா நோய் தடுப்பு நடவடிக்கைப் பணிகள் குறித்து ஆய்வு செய்தபோது, சுகாதாரமற்ற முறையில் இருந்த இரண்டு உணவகங்களை மூட ஆட்சியர் பி.முத்துவீரன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பரவலாக இருப்பதை கருத்தில் கொண்டு சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கொசு மருந்து தெளிக்கவுóம், சிக்குன் குனியா நோயைப் பரப்பும் ஏடிஎஸ் கொசுக்களை அழிக்கும் வகையில் அபேட் மருந்து தெளிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இப்பணிகளை தேனி நகராட்சி பி.சி.பட்டி, வீரபாண்டி ஆகிய பேரூராட்சிகள் மற்றும் உப்பார்பட்டி ஊராட்சியிலும் ஆட்சியர் பி.முத்துவீரன் ஆய்வு செய்தார்.

அப்போது தேனி நகராட்சி 26-ம் வார்டில் ரயில் பாதையின் இருபுறமும் ஏராளமான குப்பைகள் இருப்பதை உடனே அகற்ற அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இப்பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் சேமிக்கும் தொட்டி மற்றும் கழிவு நீர் கால்வாய் ஆகியவற்றைப் பார்வையிட்டு தூய்மையாக வைத்திருக்க அறிவுரை வழங்கினார்.

பின்பு, பஸ் நிலைய வளாகத்தில் உள்ள இரு தனியார் உணவகங்களுக்குச் சென்று சமையற்கூடங்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதைக் கண்டறிந்தார். அவற்றை உடனே மூட உத்தரவிட்டார். சமையற் கூடங்களை சுத்தம் செய்த பிறகு உரிமையாளர்கள் நகராட்சி அலுவலர்களிடம் சான்று பெற்று திறக்க வேண்டும் என உத்தர விட்டார். இதையடுத்து பி.சி.பட்டி, வீரபாண்டி, உப்பார்பட்டி ஆகிய இடங்களில் தெருத்தெருவாகவும், வீடு, வீடாகவும் சென்று தண்ணீர் தொட்டி, சாக்கடை மற்றும் சுற்றுப்புறங்களைப் பார்வையிட்டு தூய்மையாக வைத்துக் கொள்ள பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பின்னர் அவர் கூறுகையில், வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க கொசு மருந்து அடிக்க சுகாதாரத் துறை மூலம் 100 தாற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் தலா 10 பேர் வீதம் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அளவு மருத்துவர்கள் மற்றும் அவசரத் தேவைகளுக்கு மருந்துகளும் தயார் நிலையில் உள்ளன. மாவட்ட நிர்வாகம் வைரஸ் காய்ச்சலை தடுக்கத் தேவையான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றார்.

அப்போது சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செல்லத்துரை, நகராட்சி ஆணையர் மோனி, பேரூராட்சித் தலைவர்கள் பி.சி.பட்டி வித்யா, வீரபாண்டி ரத்தினசபாபதி, பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Last Updated on Wednesday, 04 November 2009 05:58