Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை மாநகர் பகுதியில் சுகாதாரத்தை பாதுகாக்க 25 ஆயிரம் கிலோ "ப்ளிச்சிங் பவுடர்

Print PDF

தினமணி 10.11.2009

நெல்லை மாநகர் பகுதியில் சுகாதாரத்தை பாதுகாக்க 25 ஆயிரம் கிலோ "ப்ளிச்சிங் பவுடர்

திருநெல்வேலி, நவ. 9: மழை, வெள்ளத்தால் சுகாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு 25 ஆயிரம் கிலோ "ப்ளிச்சிங் பவுடர்' தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, மக்களை மீட்பதற்கு, திருநெல்வேலி மாநகராட்சி ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாநகர்ப் பகுதியில் மாநகராட்சி ஆணையர் கா. பாஸ்கரன் தலைமையில் வெள்ள மீட்பு மற்றும் சுகாதாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக் குழு மாநகர்ப் பகுதி தாமிரபரணியில் அதிக வெள்ளம் ஏற்பட்டால் சிந்துபூந்துறை, வேடுவர் காலனி, கணேசபுரம், பாரதிநகர், கைலாசபுரம், மீனாட்சிபுரம் கிழக்கு, புளியந்தோப்பு தெரு, கொக்கிரகுளம், சி.என். கிராமம், மேலநத்தம் உள்ளிட்ட 26 பகுதிகள் பாதிக்கப்படும் என கண்டறிந்துள்ளது.

இதேபோல, அதிக மழை பெய்தால் பாதிக்கப்படும் என அழகநேரி, பாலபாக்கியாநகர், திம்மராஜபுரம், சக்திநகர், கோட்டூர் ரோடு, மனகாவலம்பிள்ளைநகர், சாந்திநகர், சேவியர் காலனி உள்பட 16 பகுதிகளை கண்டறிந்துள்ளது.தாமிரபரணியில் அதிக வெள்ளம் ஏற்படும்போது பாதிக்கப்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்குவதற்காக, அந்தந்தப் பகுதியில் உள்ள பள்ளிகளை மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் வைத்துள்ளது. திங்கள்கிழமை தாமிரபரணியில் ஏற்பட்ட அதிக வெள்ளத்தில், இந்த பள்ளிகளில் மக்கள் தங்க வைக்கப்பட்டனர்.

மேலும் அங்கு மக்களுக்கு தேவையான உணவு,மருத்துவ வசதிகளை செய்துகொடுப்பதற்கு மாநகராட்சி முழு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதேபோல மழை, வெள்ளச் சேதங்களில் சிக்கும் மக்களை மீட்பதற்கு, மாநகராட்சி ஊழியர்கள் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மழை, வெள்ளத்தினால் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படாத வகையில் சுகாதாரத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்காக 25 ஆயிரம் கிலோ ப்ளீச்சிங் பவுடரும், 400 லிட்டர் "பினாயிலும்', 10 ஆயிரம் கிலோ சுண்ணாம்பு பவுடரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சுகாதாரக் குழு மாநகராட்சி சுகாதார அலுவலர் கலுசிவலிங்கம் தலைமையில் செயல்படுகிறது. அவ்வபோது அந்தந்தப் பகுதி மாநகராட்சி அதிகாரிகள், மழை, வெள்ளச் சேதங்களை கணக்கீட்டு வருகின்றனர். மீட்பு பணிகள் துரிதமாக நடைபெறுவதற்கு, அந்தந்த மண்டல உதவி ஆணையர் தலைமையில் மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஆபத்துக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Last Updated on Tuesday, 10 November 2009 07:35