Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கண்டியப்பேரி மருத்துவமனை அரசு மருத்துவமனையுடன் இணைப்பு

Print PDF

தினமணி 12.11.2009

கண்டியப்பேரி மருத்துவமனை அரசு மருத்துவமனையுடன் இணைப்பு

திருநெல்வேலி, நவ. 12: திருநெல்வேலி மாநகராட்சியின் கண்டியப்பேரி மருத்துவமனையை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இங்கு விரைவில் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பங்கேற்கும் விழா நடத்தப்பட்டு மருத்துவமனை முறைப்படி அத் துறையிடம் ஒப்படைக்கப்படும் என, மேயர் அ.லெ. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:

திருநெல்வேலி நகரம் தென்காசி சாலையில் உழவர் சந்தை அருகேயுள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான கண்டியப்பேரி ப. ராமசாமி மருத்துவமனை 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில் 20 படுக்கைகள் உள்ளன.

தாமிரபரணி ஆற்றுக்கு மேற்கேயுள்ள பொதுமக்கள் இம் மருத்துவமனை மூலம் பயன்பெற்று வருகின்றனர். இம் மருத்துவமனையை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைத்து அதன் கிளை மருத்துவமனையாக்க 1989 முதல் நான் முயற்சி மேற்கொண்டு வந்தேன்.

அதைத் தொடர்ந்து, மாநகராட்சியிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருநெல்வேலி எம்எல்ஏ

என். மாலைராஜாவும் பேரவையில் இக் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார். அதைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் இம் மருத்துவமனையைப் பார்வையிட்டு இணைப்புக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்தார்.

இப்போது இணைப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர் கருணாநிதிக்கும், துணை முதல்வர் ஸ்டாலினுக்கும், சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.

இம் மருத்துவமனை ஒப்படைப்பு விழா விரைவில் நடைபெறும். அதில் அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்பார். அதன் பின்பு மருத்துவமனை அரசுக் கிளை மருத்துவமனையாக இயங்கும்.

இம் மருத்துவமனைக்கு நாள்தோறும் சுமார் 400 பேர் வந்து செல்கின்றனர். இங்கு வெளிநோயாளிகள் பகுதியைத் திறக்கவும், கூடுதல் வசதிகளை செய்யவும் சுகாதாரத் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம்.

மருத்துவமனை மூலம் சுற்றியுள்ள 22-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுவர். அரசு மருத்துவமனையில் நெருக்கடி குறையும். 5 ஏக்கர் பரப்பளவு உள்ள இம் மருத்துவமனையை விரிவுபடுத்தி மக்களுக்கு சேவையாற்ற முடியும்.

மருத்துவமனையை ஓராண்டுக்கு பராமரிக்க அரசு ரூ. 43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றார் மேயர்.

என். மாலைராஜா எம்எல்ஏ, துணை மேயர் கா. முத்துராமலிங்கம், ஆணையர் கா. பாஸ்கரன், மண்டலத் தலைவர்கள் சுப. சீதாராமன், பூ. சுப்பிரமணியன், மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எஸ். கனகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Last Updated on Friday, 13 November 2009 09:08