Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேங்கும் குப்பைகளை உடனே அகற்ற மேயர் உத்தரவு

Print PDF

தினமணி 14.11.2009

தேங்கும் குப்பைகளை உடனே அகற்ற மேயர் உத்தரவு

மதுரை, நவ. 13: மதுரை நகரில் தேங்கி உள்ள குப்பைகளை உடனே அகற்றுமாறு அதிகாரிகளுக்கு மேயர் கோ. தேன்மொழி உத்தரவிட்டார். மதுரையில் மழையால் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி கருத்தரங்கு கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மேயர் கோ. தேன்மொழி தலைமை வகித்தார். ஆணையர் எஸ். செபாஸ்டின், துணை மேயர் பி.எம். மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நகரில் தேங்கியுள்ள குப்பைகளை உடனே அகற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளுமாறு மேயர் உத்தரவிட்டார்.

குப்பை அள்ளும் வாகனங்கள் தற்போது செல்லூர் பகுதியில் உள்ள மாநகராட்சி லாரி நிலையத்தில் இருந்து செல்வதால் குப்பைகள் அள்ளுவதற்கு காலதாமதம் ஏற்படுவதாக மண்டல அலுவலர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து குப்பை அள்ளும் வாகனங்கள் அந்தந்த மண்டலத்தில் இருந்து செல்ல நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

பழுதடைந்துள்ள டம்பர் பின்கள், ஆட்டோக்கள், குப்பை லாரிகளை உடனே பழுது நீக்கி, அந்தந்த மண்டலத்துக்கு ஒதுக்கீடு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு மேயர் உத்தரவிட்டார். பின்னர் ஆணையர் பேசுகையில், நகர் முழுவதும் குப்பைகள் தேங்காத வகையில் உடனே அகற்ற சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குப்பைகளை உடனே அகற்றுவதற்கு ஏதுவாகக் குப்பை லாரிகளை ஒதுக்கீடு செய்யவும், முக்கிய இடங்களில் டம்பர் பின்கள் வைக்கவும், பிளீச்சிங் பவுடர் தேவையான அளவு கையிருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், தலைமைப் பொறியாளர் கே. சக்திவேல், கண்காணிப்புப் பொறியாளர் ஆர். விஜயகுமார், நகர் நல அலுவலர் சுப்பிரமணியன், உதவி நகர் நல அலுவலர் யசோதாமணி, நிர்வாகப் பொறியாளர்கள் மதுரம், மோகன்தாஸ், தாமோதரன் மற்றும் உதவி ஆணையர்கள், பொறியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக 29-வது வார்டுப் பகுதிகளில் மேயர், துணை மேயர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

போடி லைன், கருமாரியம்மன் கோயில், சாலை நகர், அருண் மருத்துவமனை சாலை, பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, குடும்பக் கட்டுப்பாடு மருத்துவமனை ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர்.

அப்போது, குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கியிருந்ததைப் பார்வையிட்ட மேயர் குப்பைகளை உடனே அகற்ற உத்தரவிட்டார். குப்பைகளை உடனுக்குடன் அகற்றி, பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும். தேவையான இடங்களில் டம்பர் பின்களை வைக்க ஏற்பாடு செய்யுமாறும் சம்பந்தப்பட்ட வார்டு சுகாதார ஆய்வாளருக்கு மேயர் உத்தரவிட்டார்.

Last Updated on Saturday, 14 November 2009 06:23