Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சிகளில் குப்பை அகற்றும் பணி சுய உதவிக்குழுக்களிடம் ஒப்படைப்பு

Print PDF

தினமணி 25.11.2009

நகராட்சிகளில் குப்பை அகற்றும் பணி சுய உதவிக்குழுக்களிடம் ஒப்படைப்பு

பெங்களூர், நவ. 24: கர்நாடகத்தில் நகராட்சிகளில் திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் குப்பைகளை சேகரித்து அகற்றும் பணியை சுய உதவிக் குழுக்களிடம் அரசு ஒப்படைத்துள்ளது.

இதுதொடர்பாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் பாலச்சந்திர ஜார்க்கிஹோளி நிருபர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

கர்நாடகத்தில் திடக் கழிவு மேலாண்மைத் திட்டம் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மாநகராட்சி, நகராட்சிகளில் சேரும் குப்பைகளை முறையாக அகற்றி தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

குப்பைகளை சேகரித்து, அகற்றும் பணியை சுய உதவிக் குழுக்களிடம் அரசு ஒப்படைத்துள்ளது. இதற்கான உத்தரவை அரசு ஏற்கெனவே பிறப்பித்துள்ளது.

திட்டம் செயல்படுத்தப்படுவதை ஓராண்டு காலம் அதிகாரிகள் குழு கண்காணிக்கும். தேவைப்பட்டால் மாற்றங்கள் செய்யப்படும். குப்பைகள் உள்ளிட்ட திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு, அவற்றை லாரி போன்ற வாகனங்களில் எடுத்துச் சென்று குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படும்.

நகராட்சிகளில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த ஒப்பந்தப் பணிகளுக்கான கட்டணத்தை அந்தந்த நகராட்சிகளே நிர்ணயிக்கும். ஒரு பகுதி வருமானம் ஷ்ரீ சக்தி சுய உதவிக் குழுக்களுக்கு போய்ச் சேரும்.

நடப்பாண்டு நகராட்சிப் பகுதிகளில் ரூ.200 கோடி அளவுக்கு சொத்து வரி வசூலிக்க அரசு குறிக்கோள் நிர்ணயித்துள்ளது. முடிவடைந்த செப்டம்பர் மாதம் வரை ரூ.91 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள டவுன் பஞ்சாயத்துக்களில் 52 பஞ்சாயத்துக்களை நகராட்சி கவுன்சில்களாக தரம் உயர்த்துவது குறித்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். கிராமப் பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளதால் சுமார் 400 கிராமப் பஞ்சாயத்துக்களை டவுன் பஞ்சாயத்தாகமாற்றும் திட்டம் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

Last Updated on Wednesday, 25 November 2009 06:48