Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பழனி அடிவாரம் பகுதியில் குப்பைபோட்டால் ரூ. 5 ஆயிரம் அபராதம்

Print PDF

தினமணி 17.12.2009

பழனி அடிவாரம் பகுதியில் குப்பைபோட்டால் ரூ. 5 ஆயிரம் அபராதம்

பழனி டிச.16, பழனி அடிவாரம் பகுதி சாலைகளில் குப்பைகளைக் கொட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வள்ளலார் தெரிவித்துள்ளார்.

பழனி நகராட்சி அலுவலகத்தில் தைப்பூசம் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் வள்ளலார் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பழனி நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம், கோயில் இணை ஆணையர் இராஜமாணிக்கம், நகராட்சி ஆணையர் சித்திக் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில் ஆட்சியர் பேசியதாவது: பழனி அடிவாரம் மற்றும் கிரிவீதி பகுதியில் பக்தர்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் விதத்தில் சாலையில் குப்பைகளைக் கொட்டினால், சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வரும்.

மேலும் பழனி பேருந்து நிலையம் முதல் அடிவாரம் வரையில் 4 இடங்களில் கழிப்பிடங்கள் அமைக்கப்படும். சுகாதாரப் பணியில் புதன்கிழமை முதல் கூடுதலாக 50 பணியாளர்கள் தாற்காலிகமாக நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெறவுள்ளன.

அடிவாரம் போக்குவரத்து காவல்நிலையம் அருகே சுற்றுலாத்துறை மூலம் ரூ. 49 லட்சம் செலவில் தகவல் மையம் அமைக்கப்படவுள்ளது. கடைகளில் பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்தினால், சுகாதாரத்துறை மூலம் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். உணவு விடுதிகளில் விலைப்பட்டியல் வைக்கப்படவேண்டும். ஒட்டன்சத்திரம் முதல் பழனி வரை சாலையில் உள்ள பள்ளங்கள் விரைவில் சீர் செய்யப்படும். வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில், பழனி அடிவாரம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் ஆட்சியர்.

Last Updated on Thursday, 17 December 2009 08:42