Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பழனியில் துப்புரவுப் பணி

Print PDF

தினமணி 19.12.2009

பழனியில் துப்புரவுப் பணி

பழனி டிச.18: பழனி அடிவாரம் பகுதியில் நகராட்சி சார்பில் 100 பணியாளர்கள் முழு சுகாதாரப் பணியில் ஈடுபட்டனர்.

பழனியில் தற்போது கார்த்திகை மாதம் துவங்கியது முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வருவதால் அடிவாரம், கிரி வீதி பகுதிகளில் எங்கும் குப்பைகள் குவிந்து உள்ளன.

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வள்ளலார் இப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு குப்பை கொட்டினால் அபராதம், ஆக்கிரமிப்பு அகற்றம், கூடுதல் துப்புரவுப் பணியாளர்கள் நியமனம் என ஏராளமான உத்தரவுகள் பிறப்பித்ததைத் தொடர்ந்து, தற்போது ஆக்கிரமிப்பு மற்றும் குப்பைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

பழனி நகராட்சி சார்பில் வியாழக்கிழமை முதல் ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை அடிவாரம் ஆண்டவன் பூங்கா சாலை, இடும்பன் இட்டேரி ரோடு, அய்யம் புள்ளி வீதி, அருள்ஜோதி வீதி உள்ளிட்ட பல இடங்களில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது.

நகராட்சியின் 6 டிவிசன்களில் உள்ள 150 பணியாளர்களும் இந்தப் பகுதிகளில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம் கூறியதாவது:

பழனியில் தற்போது அடிவாரம் பகுதியில் 41 பணியாளர்களுடன் கூடுதலாக 10 பேர் இணைந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வரும் ஞாயிறு முதல் மாவட்ட ஆட்சியர் அறிவித்தபடி கூடுதலாக 50 பணியாளர்கள் என மொத்தம் 100 பேர் துப்புரவுப் பணியில் தை மாதம் வரை ஈடுபடுகின்றனர்.

மேலும் இரண்டு டம்பர் பிளேசர், இரண்டு டிராக்டர்கள் என 4 வாகனங்கள் சேரும் குப்பைகளை உடனடியாக எடுத்து உரக் கிடங்குக்குக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுத்தப்படும்.

மேலும், வரும் 23-ம் தேதி பழனி பகுதியில் உள்ள உணவு விடுதிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், டீக்கடைக்காரர்களை அழைத்து கூட்டம் நடத்தப்படவுள்ளது என அவர் தெரிவித்தார்.

துப்புரவுப் பணியில் நகராட்சி ஆய்வாளர்கள் மணிகண்டன், மதுரைவீரன், அனீபா, நெடுமாறன் மற்றும் சையது அபுதாகீர், மேற்பார்வையாளர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Saturday, 19 December 2009 07:58