Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இறைச்சி தரக்கட்டுப்பாட்டுக்கு ரூ. 4 கோடியில் இந்தியாவின் முதல் நவீன ஆய்வகம்

Print PDF

தினமணி 23.12.2009

இறைச்சி தரக்கட்டுப்பாட்டுக்கு ரூ. 4 கோடியில் இந்தியாவின் முதல் நவீன ஆய்வகம்

நாமக்கல், டிச.22: இறைச்சி தரக் கட்டுப்பாட்டுக்காக இந்தியாவின் முதல் நவீன ஆய்வகம் புதுதில்லியில் ரூ.4 கோடியில் துவங்கப்படவுள்ளதாக இந்திய பயிர்பதன தொழில்நுட்பக் கழக இயக்குநர் கே. அழகுசுந்தரம் தகவல் தெரிவித்தார்.

நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடந்த பாதுகாப்பான முறையில் விலங்குகளை உயிர்நீக்கம் செய்தல் மற்றும் சுகாதாரமான முறையில் இறைச்சியை கையாளுதல் குறித்த கருத்தரங்கில் அவர் பேசியது:

உலகிலேயே அதிகளவு கால்நடைகளை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. மேலும், உலக கடல்பரப்பில் இந்தியாவில் மட்டுமே 8 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு கடல் பரப்பு உள்ளதால் ஆண்டின் அனைத்து நாட்களும் மீன்பிடி தொழில் நடைபெறுகிறது. இத்தகைய வளமிக்க நாட்டில் நாளொன்றுக்கு ஒரு மனிதன் 1 கிராம் இறைச்சியை மட்டுமே நுகரும் நிலையுள்ளது. ஆனால், உப்பை 15 கிராம் அளவுக்கு சேர்த்துக் கொள்கின்றனர். மேலைநாடுகளில் நாளொன்று ஒரு மனிதன் 45 முதல் 50 கிராம் வரை இறைச்சியை நுகருகின்றனர்.

இந்தியாவில் நிலப்பரப்பு குறைந்து கொண்டும், மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் உணவுக்காக இறைச்சியை நம்பியே வாழ வேண்டிய சூழல் ஏற்படும். எனவே, சுகாதாரமான முறையில் இறைச்சியை கையாளுவதும், பாதுகாப்பான முறையில் அவற்றை பதப்படுத்துதலும் அவசியமானது. இதனை அடிப்படையாக கொண்டு மத்திய அரசானது மத்திய உணவு தொழில் அமைச்சகத்தின் கீழ் இந்திய பயிர் பதன தொழில்நுட்பக் கழகம், தேசிய இறைச்சி பதப்படுத்துதல் வாரியம் ஆகியவற்றை நிறுவியுள்ளது. இறைச்சி பதப்படுத்துதல் வாரியம் கடந்த மார்ச் மாதம் துவங்கப்பட்டது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இறைச்சியை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டுமெனில் நவீன தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் அவசியமானது. இதற்காக முதன்முதலாக புதுதில்லியில் ரூ. 4 கோடியில் வரும் மார்ச் மாதத்துக்குள் நவீன ஆய்வகம் துவங்கப்படும். இதன் தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்களிலும் நவீன தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் ஏற்படுத்தப்படும். ஊரகப்பகுதியில் பின்தங்கிய நிலையில் தொழில்களை செய்து வரும் நபர்களது வாழ்க்கைத் தரத்தை அவர்களது தொழில்சார்ந்தே மேம்படுத்தும் வகையிலான திட்டத்தை வரையறுக்கவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய உணவு தொழில் அமைச்சகம் ரூ. 400 கோடி வழங்கத் தயாராகவுள்ளது என்றார் அவர்.

கருத்தரங்கில் கால்நடைத்துறையினர், கால்நடை மருத்துவத் துறையினர், அரசு அலுவலர்கள், இறைச்சி உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர்.