Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு 1062 சிறப்பு மையங்கள் : கலெக்டர் தகவல்

Print PDF

தினமலர் 31.12.2009

போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு 1062 சிறப்பு மையங்கள் : கலெக்டர் தகவல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் ஜன.10 மற்றும் பிப்.7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக வழங்கப்பட உள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 62 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டதாக கலெக்டர் தெரிவித்தார்.

தமிழகத்தில் இளம்பிள்ளைவாத நோய் (போலியோ) ஒழிப்பதற்காக தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த நோயினை முற்றிலும் ஒழிக்கும் விதமாக ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டு அவற்றின் மூலம் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வருகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் ஆண்டில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ எனப்படும் மருந்து இரண்டு கட்டமாக கொடுக்கப்பட உள்ளது. இம்மாவட்டத்தில் போலியோ நோயினை ஒழிக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் போலியோ மருந்து கொடுப்பது குறித்து மாவட்ட கலெக்டர் பிரகாஷ் தலைமையிலான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் ஆபிஸில் நடந்தது. இதில் தூத்துக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குநர் உமா, கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் ரால்ப்செல்வின், நெல்லைமண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் மோகன், தூத்துக்குடி மாநகர ஆணையர் குபேந்திரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பன்னீர்வேலு, நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் உட்பட மாவட்டத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் பிரகாஷ் கூறியதாவது, தமிழகம் முழுவதும் போலியோ நோயினை ஒழிக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதிலும் போலியோ சொட்டுமருந்து முகாம் அமைக்கப்படுகிறது. இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயிரத்து 62 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

வரும் ஜன.10ம் மற்றும் பிப் 7 ஆகிய தேதிகளில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இலவசமாக கொடுக்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்காக மாவட்டத்தில் உள்ள நகரங்களிலும், கிராமங்களிலும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடங்கள், சத்துணவு மையங்கள், சமுதாய நலக்கூடம் உள்ளிட்ட ஆயிரத்து 62 மையங்களில் போலியோ சொட்டுமருந்து கொடுக்கும் மையங்களாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் பல்வேறு துறையைச் சேர்ந்த அலுவலகங்கள் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படவுள்ளது. முகாமில் சுகாதாரத்துறை பணியாளர்கள், மருத்துவத்துறை பணியாளர்கள், சமூகநலத்துறை, சத்துணவு பணியாளர்கள், வருவாய்துறை, கல்விதுறை ரோட்டரி லயன்ஸ் கிளப், தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள், சுயஉதவிக் குழுக்கள் ஆகியோர்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட உள்ளனர். மேலும் பொதுமக்கள் கூடும் இடமாகிய பஸ்ஸ்டாண்டுகள், ரயில்வே ஸ்டேஷன் திருச்செந்தூர் கோயில் ஆகிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு அவற்றின் மூலமாக போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது.இரண்டு கட்டமாக போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. இதற்கு முன் எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்தாலும் வரும் இரண்டு முகாமில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயமாக போலியோ சொட்டுமருந்து கொடுக்க வேண்டும்.

மேலும் சிறுநோயிகளான காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு இருந்தாலும் கூட இந்த சொட்டு மருந்து கொடுக்கலாம். எக்காரணம் கொண்டும் சொட்டு மருந்து கொடுக்காமல் இருக்க கூடாது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். மேயர் கஸ்தூரிதங்கம், திருச்செந்தூர் ஒன்றிய சேர்மன் உமாதேவி, கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோசல்ராம் உட்பட பஞ்., பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 31 December 2009 06:50