Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தயார் நிலையில் 8 நவீன கழிப்பிடங்கள்: ஆணையர்

Print PDF

தினமணி 07.01.2010

தயார் நிலையில் 8 நவீன கழிப்பிடங்கள்: ஆணையர்

மதுரை, ஜன. 6: மதுரை நகரில் மாட்டுத்தாவணி உள்ளிட்ட 8 இடங்களில் தனியார் மூலம் நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இவற்றை மத்திய அமைச்சர் மு..அழகிரி விரைவில் திறந்துவைப்பார் என்று மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது:

தில்லியில் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் நவீன கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவைபோன்று மதுரையிலும் அமைத்துத் தருமாறு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சிப் பகுதியில் 20 இடங்களில் நவீன கழிப்பறைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது மாட்டுத்தாவணி பஸ் நிலையம், பெரியார் பஸ் நிலையம், பழங்காநத்தம் பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம், அரசு ராஜாஜி மருத்துவமனை, சுந்தரராஜபுரம் மார்க்கெட், குரு தியேட்டர் அருகில் ஆகிய 8 இடங்களில் தனியார் நிறுவனங்கள் மூலம் நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டு தயார்நிலையில் உள்ளன.

இவை தவிர மேலும் 12 நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் இம்மாத இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும்.

இந்த நவீன கழிப்பறைகளை அமைத்துக் கொடுக்கும் நிறுவனங்களே, சீருடைப் பணியாளர்கள் மூலம் பராமரிக்க உள்ளன.

இவற்றை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி விரைவில் திறந்துவைக்க உள்ளார் என்றார் ஆணையர்.

முன்னதாக பைபாஸ் சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்யும் பணிகளையும், பழங்காநத்ததில் தனியார் நிறுவனம் மூலம் அமைக்கப்பட்டுள்ள நவீன கழிப்பறையையும் ஆணையர் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

சத்யசாய் நகர் பகுதியிலுள்ள கால்வாய், மூலக்கரை மற்றும் தத்தனேரி பகுதியில் குப்பைகள் அகற்றும் பணி ஆகியவற்றையும் ஆணையர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், உதவி ஆணையர் (வருவாய்) இரா.பாஸ்கரன், உதவி ஆணையர் (மேற்கு) ரவீந்திரன், நிர்வாகப் பொறியாளர் மோகன்தாஸ், உதவி செயற்பொறியாளர் சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Last Updated on Thursday, 07 January 2010 10:56