Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

64 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

Print PDF

தினமணி 11.01.2010

64 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

சென்னை, ஜன.10: தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 64 லட்சம் குழந்தைகளுக்கு (91 சதவீதம்) முதல் தவணை போலியோ கூடுதல் சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜன.10) வழங்கப்பட்டது.

விடுபட்ட குழந்தைகளுக்கு கிராம சுகாதார செவிலியர்கள் வீடு வீடாகச் சென்று இன்னும் 3 தினங்கள் போலியோ சொட்டு மருந்து கொடுக்க உள்ளனர் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் எஸ்.இளங்கோ தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கு வரும் பிப்ரவரி 7-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாவது தவணை கூடுதல் போலியோ சொட்டு மருந்து அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

போலியோவை முற்றிலும் ஒழிக்க நாடு முழுவதும் போலியோ கூடுதல் சொட்டு மருந்து முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேசிய அளவில் 2008-ம்ஆண்டு 559 பேரும் 2009-ம் ஆண்டு 721 பேரும் போலியாவில் பாதிக்கப்பட்டனர். எனினும் 2004-ம் ஆண்டு முதல் தொடர்ந்து தமிழகத்தில் போலியா பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

4.41 லட்சம் குழந்தைகளுக்கு...: சென்னையில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 40,399 சிறப்பு மையங்கள் மூலம் 64 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. சொட்டு மருந்து கொடுக்கப்பட்டவுடன் குழந்தைகளின் இடது கை சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி சார்பில் 1,126 மையங்கள் மூலம் 4 லட்சத்து 41 ஆயிரத்து 641 (89.6 சதவீதம்) குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 4.6 சதவீதம் அதிக குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்களில் சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொது சுகாதாரத் துறை, ரோட்டரி சங்கங்கள், அரிமா சங்கங்கள் உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 2 லட்சம் பேர் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கும் பணியைச் செய்தனர்.

பஸ் நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்களிலும் சிறப்பு சொட்டு மருந்து மையங்கள் செயல்பட்டன.

சிறப்பு நடவடிக்கை: சிறப்பு நடவடிக்கையாக வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது. தமிழகத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிகள், மேம்பாலம், ரயில்வே இருப்புப் பாதை சீரமைப்புப் பணிகளில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்க்கின்றனர். உத்தரப் பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களில் இப்போதும் போலியோவினால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே பிற மாநிலங்களிலிருந்து வந்து போகும் மக்கள் மூலம் போலியோ நோய் பரவும் ஆபத்து உள்ளதால், இடம்பெயர்ந்தோர் குழந்தைகளைக் கணக்கெடுப்பு செய்து போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. இரண்டாவது தவணை முகாம் தினத்தன்றும் (பிப்ரவரி 7-ஞாயிறு) இந்தக் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படும்.

Last Updated on Monday, 11 January 2010 06:49