Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

போடி பகுதியில் சுகாதாரத் துறை இயக்குநர் ஆய்வு

Print PDF

தினமணி 13.01.2010

போடி பகுதியில் சுகாதாரத் துறை இயக்குநர் ஆய்வு

போடி, ஜன. 12: தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் எஸ். இளங்கோ போடிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தார்.

போடியில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிறுவன் நவீன்குமார் திங்கள்கிழமை இறந்தான். இதனையடுத்து, சிறுவன் இறந்தது குறித்து ஆய்வு செய்ய, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மற்றும் போடி சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியோர் கேட்டுக்கொண்டதன் பேரில், தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் எஸ். இளங்கோ செவ்வாய்க்கிழமை போடி வந்தார்.

இறந்த சிறுவனின் தந்தை வெங்கிடசாமியிடம் சிறுவன் இறந்தது குறித்தும், அவனுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர், அப் பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று தண்ணீர்த் தொட்டிகள், சாக்கடைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். ஒரு வீட்டின் தண்ணீர்த் தொட்டியில் கொசுக்களின் லார்வா பருவ புழுக்கள் அதிகமாக இருந்ததை மாதிரிக்காக பாட்டிலில் சேகரித்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தின் பல பகுதிகளில் காய்ச்சல் அதிகமாகக் காணப்படுவதற்கு தற்போதுள்ள பருவநிலையும் காரணம். போடியில் சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கலாம் என செய்தி வெளியானதால் இந்த ஆய்வுக்கு வந்துள்ளேன்.

சிறுவன் இறந்தது குறித்து விசாரித்ததில், தனியார் மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டு, பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் 3 நாள் சிகிச்சையில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனையில் விசாரித்தபோது, மலேரியா, டைபாய்டு போன்ற காய்ச்சல் இருந்ததற்கான அறிகுறி இல்லை என்றும், வைரஸினால் ஏற்படக் கூடிய டெங்கு காய்ச்சல் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், சிறுவனின் ரத்த மாதிரிகளை எடுத்து அனுப்பியுள்ளதால், அது வந்த பின்னர்தான் தெரியும் எனக் கூறியுள்ளனர்.

மேலும் இதுகுறித்து பூச்சியியல் துறை வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இப் பகுதியில் இன்று சுற்றிப் பார்த்தபோது, குப்பைகள், சாக்கடை தேக்கம் இல்லை. ஆனால், வீடுகளில் சென்று பார்த்தபோது, தண்ணீர் பிடித்து வைத்து 10 நாள்களுக்கும் மேலாகி விட்டதால், தண்ணீர் தூசி படிந்து, கொசுக்களின் புழுக்கள் அதிகமாக காணப்பட்டன.

23 சதவீத வீடுகளில் தண்ணீரைச் சுத்தம் செய்யாமல் மீண்டும் மீண்டும் தண்ணீர் பிடித்து வைத்துப் பயன்படுத்துவதால் கொசுக்கள் அதிகம் உள்ளன. அவற்றை வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நகராட்சி மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

அவருடன், போடி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். லட்சுமணன், மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் எஸ். செல்லதுரை, நகராட்சி ஆணையாளர் கே.சரவணக்குமார், சுகாதார் ஆய்வாளர்கள் மெர்லின் வர்கீஸ், பழனிச்சாமி, சென்றாயன் உள்ளிட்டோர் சென்றனர். முன்னதாக, நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் இப் பகுதியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு கொசு மருந்து அடித்தனர்.

Last Updated on Wednesday, 13 January 2010 09:31