Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பொங்கல்: கூடுதலாக 1,600 டன் குப்பை

Print PDF

தினமணி 18.01.2010

பொங்கல்: கூடுதலாக 1,600 டன் குப்பை

சென்னை, ஜன. 17: பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் கடந்த 4 நாள்களில் கூடுதலாக 1,600 டன் குப்பை சேகரிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை கடந்த 4 நாள்களாக சென்னையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்த 4 நாள்களில் குப்பைகள், கரும்பு சக்கைகள் என அதிக அளவில் குவிந்தன. வழக்கமாக சென்னையில் உள்ள 10 மண்டலங்களில் நாள் ஒன்றுக்கு 3,300 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதில் 3, 6, 8, 10 ஆகிய மண்டலங்களில் நீல்மெட்டல் நிறுவனமும் மற்ற 6 மண்டலங்களில் மாநகராட்சி சார்பிலும் குப்பைகள் அகற்றப்படுகின்றன.

பொங்கல் பண்டிகையின்போது கூடுதல் குப்பைகள் சேரும் என்பதால் இரவு, பகலாக குப்பை அகற்றும் பணியில் துப்புரவுத் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். கடந்த 4 நாள்களில் தினமும் கூடுதலாக 400 டன் வீதம் 1,600 டன் குப்பை சேகரிக்கப்பட்டுள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு 3,700 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது. சென்னை மெரினாவில் மட்டும் வழக்கத்தைவிட கூடுதலாக 5 டன் குப்பை சேகரிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக அங்கு 3 டன் குப்பை சேகரிக்கப்படும் என்று மாநகராட்சி தெரிவிக்கிறது.

இதேபோல் சென்னை புறநகர் பகுதிகளிலும் அதிக அளவு குப்பை சேகரிக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர்: அம்பத்தூர் நகராட்சி பகுதியில் வழக்கமாக 235 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்த நிலையில் போகிப் பண்டிகையன்று வழக்கத்தைவிட 25 டன் குறைந்து 210 டன் குப்பை சேகரிக்கப்பட்டது.

பொங்கல் மற்றும் மாட்டு பொங்கலன்று கூடுதலாக தலா 20 டன் வீதம் குப்பை அகற்றப்பட்டுள்ளது. காணும் பொங்கலன்று கூடுதலாக 5 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது. தாம்பரம்: தாம்பரம் நகராட்சியில் தினமும் 110 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. போகி, பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கலன்று கூடுதலாக தலா 10 டன் குப்பை அதிகரித்துள்ளது.

பல்லாவரம் நகராட்சியில் நாள் ஒன்றுக்கு 100 டன் குப்பை அகற்றப்படுகிறது. பொங்கல் பண்டிகை தினத்தில் கடந்த 4 நாட்களில் சராசரி 7 முதல் 8 சதவீத குப்பை கூடுதலாக அகற்றப்பட்டது. ஆலந்தூர்: ஆலந்தூர் நகராட்சியைப் பொருத்தவரை நாள்தோறும் 80 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகை காலத்தில் தினமும் சராசரி 10 டன் குப்பை கூடுதலாக அகற்றப்பட்டது.

Last Updated on Monday, 18 January 2010 06:47