Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பட்டுக்கோட்டையில் விரைவில் புதை சாக்கடைப் பணி

Print PDF

தினமணி 18.01.2010

பட்டுக்கோட்டையில் விரைவில் புதை சாக்கடைப் பணி

பட்டுக்கோட்டை, ஜன. 17: பட்டுக்கோட்டையில், புதை சாக்கடை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்றார் மத்திய நிதித்துறை இணையமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம்.

ராஜாமடம் கிராமத்தில் அண்ணா பல்கலைக் கழக அரசு பொறியியல் கல்லூரியை அமைத்துத் தந்ததற்காக, பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதி லயன்ஸ், ரோட்டரி மற்றும் ஜூனியர் சேம்பர் ஆகிய சமூக சேவை சங்கங்கள் சார்பில், பட்டுக்கோட்டையில் சனிக்கிழமை இரவு தனக்கு அளிக்கப்பட்ட பாராட்டு விழாவில் அவர் பேசியது:

எனது வாழ்க்கையில் ஒப்புக் கொண்ட முதல் பாராட்டுக் கூட்டம் இதுதான். எல்லா புகழும் இறைவனுக்கே என்பதுபோல, இங்கே எனக்கு அளிக்கப்படும் பாராட்டுகள் அனைத்தும் தமிழக முதல்வரையே சேரும்.

பொதுமக்களுக்குத் தேவையான எந்த திட்டத்தையும், தட்டாமல் நிறைவேற்றித் தரும் தமிழக முதல்வர் 2 ஆண்டுகளுக்கு முன், பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ரூ. 200 கோடி செலவில் கல்லணைக் கால்வாயைச் சீரமைக்க உத்தரவிட்டார்.

தற்போது, கல்லணைக் கால்வாயில் விட்டுப்போன வாய்க்கால்களை சீரமைப்பதற்காக, மேலும் ரூ. 200 கோடியை தமிழக அரசு அனுமதித்துள்ளது.

இப்பகுதி பெண்கள் நீண்ட தூரம் சென்று கல்லூரியில் படிக்க இயலாது என்பதை கருத்தில் கொண்டு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவோணம் பகுதிகளை உள்ளடக்கிய 40 கி.மீ. எல்லைக்குள் ராஜாமடம் கிராமத்தில், கிழக்குக் கடற்கரைச் சாலையில் ரூ. 28 கோடி செலவில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, பட்டுக்கோட்டையில் புதை சாக்கடை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. இங்கு புறவழிச் சாலை திட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், இப்பகுதியில் மின் உற்பத்திக்கான பெரிய திட்டமும் கொண்டு வரப்படலாம். அதற்கு 500 ஏக்கர், 1,000 ஏக்கர் நிலம் தேவைப்படும். இது போன்ற திட்டங்களை நிறைவேற்ற பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும்.

அதிராம்பட்டினத்தில் புதிய பஸ் நிலையம் கட்டவும், காரைக்குடி-மயிலாடுதுறை அகல ரயில் பாதை அமைக்கவும் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர்.

விழாவுக்கு, என்.ஆர். ரங்கராஜன் எம்எல்ஏ தலைமை வகித்தார். நகர வர்த்தக சங்கத் தலைவர் எஸ். ராமானுஜம், லயன்ஸ் சங்க முன்னாள் ஆளுநர் சி. ராஜகோபால், மாவட்டத் தலைவர் ஆர்.கே.பி. அருணாசலம், ரோட்டரி சங்க மாவட்டத் தலைவர் ஜி. இமானுவேல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் எம்எல்ஏக்கள் கா. அண்ணாதுரை, எஸ்.வி. திருஞானசம்பந்தம், ஏனாதி பாலசுப்பிரமணியன், பட்டுக்கோட்டை நகர் மன்றத் தலைவர் இ. பிரியா, பேராசிரியர் ராஜமாணிக்கம், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் இரா. ராஜரெத்தினம், பேரூராட்சித் தலைவர்கள் எம்.எம்.எஸ். அப்துல்வகாப், பஷீர் அகமது, என். அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாக்குழுத் தலைவர் மருத்துவர் கே. பாலகிருஷ்ணன் வரவேற்றார். ஜூனியர் சேம்பர் முன்னாள் தலைவர் எஸ்.ஆர். ரகு நன்றி கூறினார்.

Last Updated on Monday, 18 January 2010 06:51