Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

போலி எண்ணை பாக்கெட்டுகள்: சுகாதாரத்துறை சோதனை

Print PDF

தினமலர் 19.01.2010

போலி எண்ணை பாக்கெட்டுகள்: சுகாதாரத்துறை சோதனை

வேலூர் : சமையல் எண்ணை பாக்கெட்களில் போலிகள் குறித்து சுகாதார அதிகாரிகள் வேலூர், தி.மலை மாவட்டத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

சமையல் எண்ணை பாக்கெட்டுகளில் போலிகள் அதிகரித்து வருவதாக அரசுக்கு புகார்கள் வந்தன. எனவே போலிகளை கண்டறிய திடீர் சோதனை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. எனவே தமிழகம் முழுவதும் சமையல் எண்ணை பாக்கெட்டுகள் குறித்து சுகாதாரத்துறை மூலம் நேற்று சோதனை நடத்தப்பட்டது,வேலூர் சுகாதார மாவட்டத்தில் உள்ள கணியம்பாடி, ஊசூர், காவேரிப்பாக்கம், மூதூர், சோளிங்கர், நெமிலி, அணைக்கட்டு, திமிரி, ஆற்காடு மற்றும் வாலாஜா ஆகிய வட்டார பகுதிகளில் உணவு ஆய்வாளர்கள் தலைமையில் ஆய்வுகள் நடந்தது. வேலூரில் தொரப்பாடி, சங்கரன்பாளையம், நேதாஜி மார்க்கெட் உட்பட பல இடங்களில் சமையல் எண்ணை விற்பனை செய்யும் கடைகளில் சுகாதார துணை இயக்குனர் சுரேஷ் தலைமையில், மாநகராட்சி உணவு ஆய்வாளர் கவுரி சுந்தர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர்.

இது குறித்து சுகாதார துணை இயக்குனர் நிருபர்களிடம் கூறுகையில், எண்ணை பாக்கெட்டுகளை போலியான நிறுவனங்கள், புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயர்களை சிறு மாற்றம் செய்து விற்பனை செய்து வருகின்றன. இந்த நிறுவன பொருட்கள் தரம் குறைந்தவை. இவை அதிக பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. ஆனால் விலை குறைவாக உள்ளதால், இவற்றை மக்கள் வாங்கி உபயோகப்படுத்துகின்றனர். எனவே போலி கம்பெனிகளின் சமையல் எண்ணை மாதிரிகளை எடுத்து சென்னை கிண்டியில் உள்ள சோதனை நிலையத்திற்கு அனுப்பி உள்ளோம். அதன் முடிவு தெரிந்த பின்னர் போலி எண்ணை பொருட்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். விலை குறைவானது என்பதற்காக பொதுமக்கள் தரம் குறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்த கூடாது. சமையல் எண்ணை பொருட்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ் வாறு அவர் கூறினார்.

கலப்பட சோதனையில் உணவு ஆய்வாளர் சுரேஷ், வட்டார சுகாதார மேற்பார் வையாளர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் மன்னப்பன், சரவணராஜ், மாநகராட்சி சுகாதார மேற்பார்வையாளர்கள் சுப்பிரமணி மற்றும் புஸ்பராஜ் ஆகியோர் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் : திருப்பத்தூர் சுகாதார மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சமையல் எண்ணை பாக்கெட்டுகள் தரம் குறித்து சுகாதார துணை இயக்குனர் பிரேம் குமார் தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆய்வுக்கு எடுக்கப்பட்ட எண்ணை சாம்பிள்கள் சென்னையில் உள்ள சோதனைக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்பணி இன்றும் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை : தி.மலை நகரில் கலப்பட எண்ணை விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தி.மலை நகராட்சி கமிஷனர் சேகர் தலைமையில் சுகாதார பிரிவு அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து நகரில் பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். உணவு வகைகளுக்கு பயன்படுத்தப்படும் எண்ணையில் கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

இது குறித்து நகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: அரசு உத்தரவின்படி உணவு வகைகளுக்கு பயன்படுத்தப்படும் எண்ணையில் கலப்படம் உள்ளதா என்பது குறித்து தி.மலையில் பல்வேறு கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், சில கடைகளில் இருந்து எண்ணை கைப்பற்றப் பட்டு, அதன் மாதிரிகள் சோதனை செய்வதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

பெரணமல்லூர் : பெரணமல்லூர் பேரூராட்சியில் நேற்று சுகாதார ஆய்வாளர்கள் சுப்பிரமணி மற்றும் ரகுபதி, கோபாலகிருஷ்ணன், முகமதுகவுஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் மளிகை கடைகளில் திடீர் ஆய்வு செய்து பொருட்களின் தரத்தினை சோதித்தனர். நல்லெண்ணை, விளக்கெண்ணை உட்பட எண்ணை மாதிரிகளை எடுத்து சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை பகுதியில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேரன் தலைமையில், விரிவாக்க கல்வியாளர் சிவசங்கரன் முன்னிலையில் ஆய்வா ளர்கள் பிரேம் ஆனந்த், ரவி, மோகன்ராஜ் மற்றும் குழுவினர் சிப்காட், மணியம்பட்டு, அம்மூர், முசிறி, நவ்லாக் உட்பட பல பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் விற்கப்படும் சமையல் எண்ணைகளின் "மாதிரி'களை சேகரித்தனர். இவை அனைத்தும் நேற்று மாலை சென் னையில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வறிக்கை வந்த பிறகு அனைத்து பகுதிகளிலும் ஆய்வின் முடிவு பற்றியும், நன்மை தீமைகள் பற்றியும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Tuesday, 19 January 2010 06:47