Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவ முகாம்

Print PDF

தினகரன் 31.01.2010

சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை : சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவ முகாம், சென்னையில் 30 இடங்களில் மாநகராட்சி நடத்தியது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து சர்க்கரை நோய்க்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம்களை, சென்னையில் 30 இடங்களில் மாநகராட்சி நடத்தியது. திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த முகாமை, மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர், மேயர் பேசியதாவது:

சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை, பொது மருத்துவ முகாம்களை அவ்வப்போது நடத்தி வருகிறது. ஆனால், சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு மருத்துவ முகாம், இப்போதுதான் முதன் முறையாக நடத்தப்படுகிறது

இந்தியாவிலுள்ள வேறு எந்த மாநகராட்சியிலும் இதுபோன்ற சிறப்பு முகாம் நடத்தவில்லை. மாநகராட்சி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை ஆகியவற்றின் 300க்கும் அதிகமான டாக்டர்கள், இந்த முகாம்களில் பங்கேற்று, நோயாளிகளை பரிசோதித்து ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கின்றனர்.

சென்னையில் சுமார் 3 லட்சம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில், சர்க்கரை இருப்பது கண்டறிந்தால் தேவையான மருந்து, மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. தொடர் சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. சர்க்கரை நோயால் பாதித்தவர்களின் கண், கால், இதயம் ஆகியவையும் பரிசோதிக்கப்படுகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு மாநகராட்சி மருத்துவமனைகளில் மாதம் இருமுறை இலவசமாக மருந்துகள் வழங்கப்படுகிறது. சர்க்கரை நோய் கண்டறிய 300 குளுகோ மீட்டர்களும், 12 செமி ஆட்டோ அனலைசர்களும் மாநகராட்சி மருத்துவமனைகளில் வாங்கி வைக்கப்பட்டுள்ளன. அடிப்படை வசதிகளுக்கு மட்டும் அல்லாமல், மக்களின் சுகாதாரத்தை பேணிக் காக்கவும் மாநகராட்சி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கிறது. இவ்வாறு மேயர் பேசினார்.

துணைமேயர் ஆர்.சத்யபாமா மன்ற ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், மன்ற எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி, துணை ஆணையர் (சுகாதாரம்) ஜோதி நிர்மலா, சுகாதாரக்குழு தலைவர் மணிவேலன், கவுன்சிலர் வனஜா ஆகியோர் பங்கேற்றனர்.

முகாமில் மேயர், மன்ற எதிர்க்கட்சித் தலைவரும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். முகாமில், மொத்தம் 16,700 பேர் பரிசோதனை செய்து கொண்டனர். இதில், ஏற்கனவே நோய் கண்டறியப்பட்டவர்கள் 3,620 பேர். புதிதாக 2,840 பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

Last Updated on Sunday, 31 January 2010 06:55