Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தனியாரிடம் நகராட்சி துப்புரவுப் பணிகள்

Print PDF

தினமணி 02.02.2010

தனியாரிடம் நகராட்சி துப்புரவுப் பணிகள்

மேட்டுப்பாளையம் பிப்,1: மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட துப்புரவுப் பணிகளை தனியார் நிறுவனத்தாரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, திங்கள்கிழமை நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் நகராட்சியில் துப்புரவுப் பணியாளர்களின் பற்றாக்குறையால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு நகரெங்கும் சாக்கடைகள் சுத்தப்படுத்தப்படாமல் பொதுமக்கள் அதிருப்தியுறும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, நகரின் பொது சுகாதார நலன் கருதியும், மேட்டுப்பாளையம் நகரை குப்பையில்லா நகரமாக மாற்றும் வகையிலும், நகராட்சியின் முக்கிய சுகாதாரப் பணிகளை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, நகர்மன்றத் தலைவி சத்தியவதி கணேஸ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆறுமுகம், ஆணையர் சுந்தரம் முன்னிலை வகித்தனர். நகர்நல அலுவலர் டாக்டர் பிரதீப் கிருஷ்ணகுமார் வரவேற்றார்.

நகராட்சி நிர்வாகத்திடமிருந்து பொறுப்புக்களை பெற்றுக்கொண்ட பின்னர் தனியார் நிறுவனம் அருணை குரூப்ஸ் சார்பில் அருள்மொழி கூறியது:

எங்கள் குழுமம் சார்பில் ஒசூர், ஆம்பூர் நகராட்சிகளில் மேற்கொண்ட சுகாதாரப் பணிகளையடுத்து, எங்கள் நிறுவனம் சார்பில் மேட்டுப்பாளையம் நகராட்சியில் இப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதில் முதல் கட்டமாக, நகராட்சியின் 3,5,8,10,11,12,25,27,30,31,32 ஆகிய வார்டுகள் மற்றும் பேருந்து நிலைய பகுதிகளில் தினமும் சாக்கடை சுத்தப்படுத்துதல், குப்பைகளை சேகரித்து அவைகளை உரக்கிடங்கிற்கு கொண்டு சேர்த்தல், புகை மருந்து மூலம் கொசு மருந்து அடித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இப் பணிகளில் 60 ஊழியர்கள் வரை ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந் நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் உமா, வெள்ளிங்கிரி, விஜயகுமாரி துப்புறவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், சரவணன், நல்லுசாமி, செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 02 February 2010 10:19