Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நோய்களைப் பரப்பும் பயங்கர கொசுக்கள் அதிகம்: பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாததே காரணம்

Print PDF
தினமலர் 03.02.2010

நோய்களைப் பரப்பும் பயங்கர கொசுக்கள் அதிகம்: பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாததே காரணம்

மதுரை: வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்வு இல்லாததே, மதுரையில் கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்த முடியாததற்கு காரணமாக உள்ளது.

பெண் கொசுக்கள், இனப்பெருக்கத்திற்காக மட்டுமே மனிதர்களை கடித்து ரத்தத்தை உறிஞ்சுகின்றன. ஆண் கொசுக்கள் தாவரங்களைச் சார்ந்து வாழ்கின்றன. முட்டையிலிருந்து 5வது நாள் கொசுவாக மாறி, இனப்பெருக்கத்துக்கு தயாராகிறது. ரத்தத்தை உறிஞ்சியவுடன் முட்டையிடுகிறது. கொசுக்களின் புகலிடம் : டெங்கு நோய் பரப்பும் "ஏடிஸ் எஜிப்டே' கொசுக்கள், வீட்டில் உள்ள தண்ணீரில் தான் இனப்பெருக்கம் செய்கின்றன. வீடுகளைச் சுற்றி பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள், தேங்காய் சிரட்டை, இளநீர் மட்டைகளில், சிறிதளவு தண்ணீர் பட்டாலும், அதிகளவில் உற்பத்தியாகின்றன. பாத்திரத்தில் மூன்று நாட்களுக்கு மேல் தண்ணீரை மாற்றவில்லை என்றால் கொசுக்கள் முட்டையிடும். சில நாட்களிலேயே லட்சக்கணக்கில் பெருகிவிடும். பாத்திரத்தை நன்கு தேய்த்து கழுவினால் முட்டைகளை அழித்துவிடலாம். டெங்கு நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை.

சாக்கடை கழிவுகள், ஆற்றோரம், குளம், குட்டைகளில் தேங்கியுள்ள கழிவுகளில் "கியூலக்ஸ்' கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இக்கொசுக்கள் மனிதர்களை கடிக்கும் போது, கொசுவிலிருந்து "நிமடோட்' புழுக்கள், நமது தோலின் மீது படிகின்றன. இப்புழுக்கள் கண்ணுக்கு தெரியாது. உடலில் வெட்டுக்காயம் இருந்தால், அப்பகுதி வழியாக உள்ளே சென்று, ரத்தக்குழாயை அடையும். ஒன்று முதல் இரண்டாண்டுகளில் பாதம், கால்களில் வீக்கம் ஏற்படும். இதற்கு மருந்து இருப்பதால், நோயின் தாக்கத்தை ஓரளவு குறைக்கலாம். கடலோரப் பகுதிகளில் இந்நோய் அதிகம் ஏற்படுகிறது.

தடுப்பு நடவடிக்கை : ""இந்தியாவில் மலேரியா, ஜப்பான் மூளைக் காய்ச்சல், சிக்-குன் குனியா, டெங்கு, யானைக்கால் நோய்கள் கொசுக்களால் உண்டாகின்றன, '' என்கிறார் மத்திய மருத்துவ பூச்சியியல் ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொறுப்பு) பி.கே. தியாகி.

அவர் கூறியதாவது : மதுரையில் சாக்கடை கால்வாய்கள், பயன்படாத குளம், குட்டைகளிலிருந்து, கொசுக்கள் லட்சக்கணக்கில் தினமும் உற்பத்தியாகின்றன. மாநகராட்சியினர் சாக்கடையை தூர்வாரி சுத்தம் செய்தாலும், பொதுமக்கள் தொடர்ந்து கழிவுகளை வெளியேற்றுவதால், கொசு உற்பத்தியை தடுக்க முடியவில்லை. பயன்படாத குளம், குட்டைகளை சுத்தம் செய்ய வேண்டும். அல்லது நிரந்தரமாக மூடவேண்டும். கொசுக்களின் உற்பத்திக்கு பொதுமக்களின் அறியாமை தான் காரணம். வீடு, சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்கக்கூடாது. திறந்தவெளியில் கழிவுநீரை வெளியேற்றாமல், மூடிய பள்ளத்துக்குள் செலுத்தினால் கொசுக்களை கட்டுப்படுத்தலாம். அதிகாரிகளை குறை சொல்வதை விட்டு, பொதுமக்கள் சுயவிழிப்புணர்வு பெற்றால் தான் கொசுக்களை கட்டுப்படுத்த முடியும். நிரந்தரமாக ஒழிக்க முடியும். இதற்காக மாநகராட்சி, சுகாதாரத் துறையினர், தொண்டுநிறுவனங்களோடு இணைந்து ஆலோசனை நடத்த உள்ளோம் என்றார். குறைகிறது காய்ச்சல்: நகர்நல அலுவலர் தகவல்: கொசுக்களின் கொடுமை, பரவும் காய்ச்சல் குறித்து மதுரை மாநகராட்சி நகர்நல அலுவலர் வி.சுப்பிரமணியன் கூறியதாவது: பாதாள சாக்கடை பணிகள், கால்வாய்களில் கான்கிரீட் போடும் பணி போன்றவற்றால் தண்ணீர் தேங்கி, கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. கொசுக்களை ஒழிக்க, தற்போது "டெக்னிக்கல் மாலத்தான்' என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மண்டலமும் ஆறு பிளாக்குகளாக பிரித்து, புகை மருந்து அடிக்கப்படுகிறது. இதனால் தற்போது காய்ச்சல் குறைந்துள்ளது.

சென்ற ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை, காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இந்த மாதங்களில் சராசரியாக ஒரு நாளைக்கு மாநகராட்சி மருத்துவமனைகளில் 200 பேர், காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்தனர். ஜனவரி மாதம் முதல் இது ஒரு நாளைக்கு 50 பேராக குறைந்துள்ளது. ஒரு ஆண்டுக்கு கொசு மருந்து வாங்க 5 லட்சம் ரூபாயும், மற்ற ரசாயனங்கள், பிளீச்சிங் பவுடர், பினைல், துப்புரவு உபகரணங்கள் வாங்க 10 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது. சுகாதார பணியாளர்களின் சம்பளம் தனி என்றார்.

Last Updated on Wednesday, 03 February 2010 07:41