Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி குப்பை அள்ளும் பணி ஒப்படைப்பு! மகளிர் சுய உதவிக்குழுக்களிடம்...

Print PDF

தினமலர் 04.02.2010

நகராட்சி குப்பை அள்ளும் பணி ஒப்படைப்பு! மகளிர் சுய உதவிக்குழுக்களிடம்...

நாமக்கல்: நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைக் கழிவுகள் சேகரிக்கும் பணி மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை தனியார் நிறுவனம் ஒன்று சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. அதை நகராட்சி நிர்வாகத்தினர் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்தினரின் குப்பை சேகரிக்கும் பணிக்கான காலம் நிறைவு பெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது குப்பை சேகரிக்கும் பணியை மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் நகராட்சி நிர்வாகத்தினர் ஒப்படைத்துள்ளனர். மொத்தம் உள்ள 30 வார்டுகளை நான்கு மண்டலங்களாக பிரித்து இம்மாதம் 1ம் தேதி முதல் மகளிர் சுய உதவிக்குழுவினர் குப்பை சேகரித்து வருகின்றனர். அந்த பணியில் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 72 பேர் ஈடுபட்டு வருகின்றனர். இது மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையிலும் அமைந்துள்ளது.

இது குறித்து நகராட்சி கமிஷனர் ஆறுமுகம் தெரிவித்ததாவது:

நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புகளில் சேகரமாகும் குப்பைகள் கொசவம்பட்டியில் உள்ள கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. அங்கு மக்கும் குப்பை, மக்கா குப்பை என தனித்தனியாக பிரித்து உரம் தயாரிக்கப்பட உள்ளது. அதற்கான இயந்திரம் அங்கு அமைக்கப்பட்டு வருகிறது. அது விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. மக்கா குப்பைகள் தனியாக எடுத்து லத்துவாடியில் அமைக்கப்பட்டு வரும் கிடங்கில் கொட்டப்படும். அதன்மூலம் சுற்றுப்புற சுகாதாரம் சீர்கேடு ஏற்படாதவாறு இருக்க அந்த கிடங்கைச் சுற்றிலும் மரங்கள் நடப்பட்டுள்ளன. மேலும், நகராட்சியில் குப்பை சேகரிக்கும் பணி மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கான தீர்மானம் கடந்த மாத கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இம்மாதம் 1ம் தேதி முதல் சுய உதவிக் குழுவினர் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

தனியார் நிறுவனத்தினர் கூடுதல் தொகை கேட்டதால், அவர்களுக்கு குப்பை சேகரிக்கும் பணியை விட இயலவில்லை. தற்போது சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 72 பேர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற பணி வேறு எந்த நகராட்சியிலும் மேற்கொள்ளப்படவில்லை. நாமக்கல் நகராட்சியில் தான் முதலில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தூய்மையான நகராட்சி என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நகராட்சி தூய்மையாக பராமரிப்பு செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் குழு இம்மாதம் 11ம் தேதி நாமக்கல் வர உள்ளது. அக்குழுவினர் அளிக்கும் ஆலோசனை, பரிசீலனை செய்து நடைமுறைபடுத்தப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Last Updated on Thursday, 04 February 2010 07:48