Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கெட்டுப்போன இறைச்சி, தரமற்ற உணவு வேலூரில் 3 உணவகங்களுக்கு விரைவில் நோட்டீஸ்!

Print PDF

தினமணி 05.02.2010

கெட்டுப்போன இறைச்சி, தரமற்ற உணவு வேலூரில் 3 உணவகங்களுக்கு விரைவில் நோட்டீஸ்!

வேலூர், பிப். 4: வேலூர் மாநகராட்சியில் தரமற்ற இறைச்சி மற்றும் உணவு வகைகளைப் பரிமாறியதாக 3 உணவகங்களுக்கு வெள்ளிக்கிழமை நோட்டீஸ் விநியோகிக்கப்பட உள்ளது என்று மாநகர சுகாதார அலுவலர் சி.ஆர்.பிரியம்வதா கூறினார்.

வேலூர் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ஆபீசர்ஸ் லைன் பகுதிகளில் உள்ள உணவகங்களில் அவர் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சில உணவகங்களில் கோழி, ஆட்டிறைச்சிகள், காடைகள் உள்ளிட்டவை புழுப் பிடித்த நிலையில், குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. இவற்றைப் பறிமுதல் செய்து, குப்பையில் கொட்ட அவர் உத்தரவிட்டார். காலை, மாலை என இரு வேளைகளில் மொத்தம் 8 உணவகங்களில் இந்த ஆய்வு மேட்கொள்ளப்பட்டது.

சமைக்கப்பட்ட உணவுகளை குளிர்சாதனப் பெட்டிகளில் நீண்ட நாள்கள் வைத்து பொதுமக்களுக்குப் பரிமாறக்கூடாது. அப்படிப் பறிமாறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவக உரிமையாளர்களை எச்சரித்தார். குளிர்சாதனப் பெட்டிகளில் உணவு வகைகளை நீண்ட நாள்கள் வைத்து பறிமாறுவதால் பொதுமக்களின் உடல் நலனில் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார். 6

மாதங்களுக்கு ஒரு முறை சமையலறைகள் வெள்ளையடிக்கப்பட வேண்டும். சமையலர்கள் மற்றும் உணவு பரிமாறுபவர்களுக்கான தரச் சான்று பெற்றிருக்க வேண்டும். கையுறை அணிந்து உணவு பரிமாற வேண்டும். மசாலா பொருள்கள் திறந்த நிலையில் வைத்திருக்கக் கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகளை உணவகங்கள் கடைப்பிடிக்க வேண்டும். தவறினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பின்னர் தினமணி செய்தியாளரிடம் அவர் கூறியதாவது:

சாப்பிடத் தகுதியற்ற உணவு வகைகளை வைத்திருந்த 3 உணவகங்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் விநியோகிக்கப்படும். அவற்றில் உணவகங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கப்படும். மாநகராட்சியால் கூறப்படும் நடைமுறைகளைப் பின்பற்றாத உணவகங்களில் அடுத்த 10 நாள்களில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டு 2-வது முறையாக நோட்டீஸ் வழங்கப்படும். பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

தரமற்ற உணவு வகைகள் பரிமாறப்படுவதாகப் பொதுமக்களிடம் இருந்தும், சுகாதார நலத்துறை இயக்குநரகத்திலிருந்தும் வந்த புகாரையொட்டி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மேலும் தொடரும் என்றார் பிரியம்வதா.