Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆடறுப்பு கட்டணத்தை குறைக்க மாநகராட்சி மறுப்பு: வியாபாரிகள் அதிருப்தி

Print PDF

தினமணி 09.02.2010

ஆடறுப்பு கட்டணத்தை குறைக்க மாநகராட்சி மறுப்பு: வியாபாரிகள் அதிருப்தி

திருநெல்வேலி, பிப். 8: திருநெல்வேலி மாநகராட்சி நடத்திய சமாதான பேச்சுவார்த்தையில், ஆடு அறுப்பு கட்டணத்தை குறைக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

திருநெல்வேலி மாநகராட்சி ஆடறுப்பு கட்டணத்தை ரூ. 20 ஆக உயர்த்தியதைக் கண்டித்து மாநகரில் ஒரு வாரமாக கடையடைப்பு போராட்டத்தில் ஆட்டு இறைச்சி வியாபாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணலாம் என வலியுறுத்தியதின் விளைவாக, சனிக்கிழமை போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆட்டு இறைச்சி வியாபாரிகளிடம், மாநகராட்சி பேச்சுவார்த்தை நடத்தியது.

இப் பேச்சுவார்த்தையில் ஆட்டு இறைச்சி வியாபாரிகள் சங்கத் தலைவர் கே.. முகமதுமைதீன், சி.ஐடி.யூ. நிர்வாகிகள் தியாகராஜன், மீராஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி சார்பில் மேயர் அ.லெ. சுப்பிரமணியன், துணை மேயர் கா. முத்துராமலிங்கம், மண்டலத் தலைவர்கள் சுப. சீதாராமன், முகம்மதுமைதீன், பூ. சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப் பேச்சுவார்த்தையின் முடிவில், நகரம், பாளையங்கோட்டையில் உடனடியாக ஆடறுப்பு மனைகள் அமைப்பது, அதுவரை வழக்கம்போல ஆடுகளை கடைகளிலேயே அறுப்பது, மேலப்பாளையம் மண்டலத்தைச் சார்ந்தவர்கள் அங்குள்ள ஆடறுப்பு மனையிலேயே ஆடுகளை அறுப்பது என முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஆடறுப்பு கட்டணத்தை குறைத்தால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்பதால், கட்டண குறைப்புக்கு மாநகராட்சி மறுப்புத் தெரிவித்துவிட்டது. இது ஆட்டு இறைச்சி வியாபாரிகளிடம் அதிருப்தியை ஏற்பட்டது. இதனால் செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது.

செவ்வாய்க்கிழமை ஆட்டு இறைச்சி வியாபாரிகள் கூட்டம் நடைபெறுகிறது. இக் கூட்டத்தில் போராட்டத்தை தொடர்வதா அல்லது நிறுத்துவதா என்று முடிவு எடுக்கப்படும் என்றார் கே.. முகமதுமைதீன்.

Last Updated on Tuesday, 09 February 2010 07:12