Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கரூரில் போலி ஆயில் தொழில்சாலைக்கு சீல்

Print PDF

தினமணி 17.02.2010

கரூரில் போலி ஆயில் தொழில்சாலைக்கு சீல்

கரூர், பிப். 16: கரூரில் செயல்பட்டு வந்த போலி ஆயில் தொழில்சாலைக்கு மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை சீல் வைக்க உத்தரவிட்டார்.

கரூர் மாவட்டத்தில் சில பெட்ரோல் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் என்ஜின் ஆயில் போலியானதாக இருக்கக்கூடும் என்று பொதுமக்கள் சார்பில் புகார்கள் கூறப்பட்டு வந்தன.

மேலும், கரூர் சுக்காலியூர் காட்டுப் பகுதியில் போலி என்ஜின் ஆயில் தயாரிக்கும் தொழில்சாலைகள் இயங்கி வருவதாகவும் புகார்கள் கூறப்பட்டன. இதையடுத்து கடந்த ஜன. 4-ம் தேதி கரூர் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜி. வெள்ளியங்கிரி, காவல் துணைக் கண்காணிப்பாளர் ஞான. சிவக்குமார் ஆகியோர் சுக்காலியூர் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.

அங்கு ஒரு தொழில்சாலையில் தயாரிக்கப்பட்டு வந்த ஆயிலை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட ஆயில் மாதிரி எடுக்கப்பட்டு சோதனைக்கு உள்படுத்தப்பட்டது. சோதனையில், அந்த ஆயில் போலியானது என்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஆயில் தயாரிக்கும் தொழில்சாலைக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் ஜெ. உமாமகேஸ்வரி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

மாவட்ட வழங்கல் அலுவலர் ஜி. வெள்ளியங்கிரி, வட்ட வழங்கல் அலுவலர் கே. சக்திவேல், பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர் மோகன்தாஸ், கிராம நிர்வாக அலுவலர் பழனிச்சாமி ஆகியோர் சுக்காலியூர் காட்டுப் பகுதியில் முறையான அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்த தனியார் தொழில்சாலைக்கு சீல் வைத்தனர்.

ஆலையின் உள்ளே கழிவுஆயில் 35 பேரல், ஆயில் என்ஜின் 25, வடிகட்டும் இயந்திரம் 2, கல்மாவு 23 மூட்டை, காலி பேரல் 85 உள்ளன என்றார் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜி. வெள்ளியங்கிரி.

மேலும், இது தொடர்பாக ஆலையின் உரிமையாளர் கரூர் சின்னஆண்டாங்கோயிலைச் சேர்ந்த ரமேஷ் (31), மேலாளர் கதிரேசன் ஆகியோரை தேடி வருகிறோம் என்றார் அவர்.

Last Updated on Wednesday, 17 February 2010 08:58