Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாகையில் பிப். 28-ல் யானைக்கால் நோய்த் தடுப்பு மாத்திரைகள் வழங்கும் பணி

Print PDF

தினமணி 26.02.2010

நாகையில் பிப். 28-ல் யானைக்கால் நோய்த் தடுப்பு மாத்திரைகள் வழங்கும் பணி

நாகப்பட்டினம், பிப். 25: நாகை மாவட்டத்தில் பிப். 28-ம் தேதி யானைக்கால் நோய்த் தடுப்பு மாத்திரைகள் வழங்கும் பணி நடைபெறும் என்றார் ஆட்சியர் (பொறுப்பு) . அண்ணாதுரை.

யானைக்கால் நோய் ஒழிப்புத் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ஆ. அண்ணாதுரை தலைமை வகித்தார்.

சுகாதாரத் துறை துணை இயக்குநர் வே. வைரமணி, மருத்துவத் துறை இணை இயக்குநர் பூர்வாதேவி, வருவாய்க் கோட்டாட்சியர் சி.ராஜேந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்குப் பின்னர், ஆட்சியர் (பொறுப்பு) அண்ணாதுரை தெரிவித்தது:

யானைக்கால் நோய் ஒழிப்புத் திட்டத்தில், இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் உள்ளது. நாகை மாவட்டத்தில் டி.இ.சி. மாத்திரை ஒட்டு மொத்த சிகிச்சைத் திட்டம் 1998-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை 9 சுற்றுகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் 2 ஆயிரம் பேர் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், கடந்த 5 ஆண்டுகளில் நாகை மாவட்டத்தில் ஒரு நபர்கூட, யானைக்கால் நோயால் பாதிக்கப்படவில்லை. யானைக்கால் நோய் ஒழிப்புத் திட்டத்தின் 10-ம் சுற்று, வரும் 28-ம் தேதி செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், நாகை மாவட்ட நகர்ப் பகுதிகளில் 1,97,721 பேருக்கும், ஊரகப் பகுதிகளில் 12,13,299 பேருக்கும் டி.இ.சி. மாத்திரைகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பணியில் பொது சுகாதாரத் துறை, ஊட்டச்சத்துத் துறை, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட 6,415 பேர், வீடு வீடாகச் சென்று டி.இ.சி. மாத்திரைகள் வழங்கும் பணியை மேற்கொள்வர். 2 வயதுக்குள்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், தீவிர சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் இந்த மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம். மற்றவர்கள், தவறாமல் டி.இ.சி. மாத்திரைகளை உட்கொண்டு, யானைக்கால் நோய் ஒழிப்புத் திட்டப் பணிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் அவர்.

Last Updated on Friday, 26 February 2010 09:42