Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கலப்படம் அளவோடு இருக்க வேண்டும்

Print PDF

தினமணி 26.02.2010

கலப்படம் அளவோடு இருக்க வேண்டும்

கரூர், பிப். 25: கலப்படம் இல்லாமல் எந்தத் தொழிலும் இல்லை. ஆனால், அளவோடு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார் கரூர் நகர்மன்றத் தலைவர் பி. சிவகாமசுந்தரி.

கரூர் நகரில் ஹோட்டல்கள், கடைகள் ஆகியவற்றில் ஏராளமான பொருள்கள் கலப்படம் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, உணவு கலப்பட தடைச் சட்டம், போலியான- தரக்குறைவான உணவு பொருள்கள் விற்பனையைத் தடுப்பது ஆகியன தொடர்பாக, வியாழக்கிழமை கரூர் நகராட்சி சார்பில் வியாபாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து கரூர் நகர்மன்றத் தலைவர் பி. சிவகாமசுந்தரி பேசியது:

வியாபாரிகள் பொதுமக்களை தங்கள் குடும்ப உறுப்பினர்களாகக் கருதி, பொருள்களை விற்பனை செய்ய வேண்டும். கரூர் நகரில் உள்ள அனைவரையும் குடும்பமாகக் கருத வேண்டும். கலப்படம் இல்லாமல் எந்தத் தொழிலும் இல்லை. ஆனால், அளவோடு இருக்க வேண்டும்.

குறைந்த விலையில் தரமான பொருள்களை வழங்க அனைத்துச் சங்கங்களும் கூடி ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க வேண்டும். பொருள்களின் தரம், எடையளவு குறித்து பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வருகின்றன.

எனவே, வியாபாரிகள் தங்களது பொருள்களின் தரத்தை உயர்த்தி பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். குறிப்பாக, பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்க்க வேண்டும். குப்பைகளை சாலையில் வீசாமல் குப்பைக் கூடையில் சேமித்து, நகராட்சி துப்புரவுப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார் சிவகாமசுந்தரி.

சுகாதார ஆய்வாளர் செல்வம் பேசியது:

கலப்படும், தரமற்ற பொருள்கள் விற்பனை குறித்து பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் தொடர்ந்து வந்துக் கொண்டே இருக்கின்றன. வியாபாரிகள் பொருள்களை வாங்கும் போது விற்பனைத் தேதி, அளவு, எடை, விலை ஆகியவற்றை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

முழு விவரங்களுடன் கொண்ட பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பொருள்களை மட்டுமே பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

இதுதொடர்பாக நகராட்சி சுகாதாரத் துறை மூலம் 15 நாள்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அப்போது, தரமில்லாத பொருள்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

கூட்டத்தில் மளிகை வியாபாரிகள், பால் வியாபாரிகள், உணவுக் கடை நடத்துவோர், இனிப்பு பலகாரம் விற்பனை செய்பவோர் உள்ளிட்ட பல்வேறு வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

நகராட்சி ஆணையர் (பொ) சி. ராஜா, நகர்நல அலுவலர் கே. சந்தோஷ்குமார், நுகர்வோர் அமைப்பின் மாநில நிர்வாகி கே. சொக்கலிங்கம் உள்ளிட்டோரும் பேசினர்.

Last Updated on Friday, 26 February 2010 09:24