Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுகாதார சீர்கேடு: நெல்லை புதிய பஸ் நிலையத்தில் 2 உணவகங்களை மூட உத்தரவு

Print PDF

தினமணி 26.02.2010

சுகாதார சீர்கேடு: நெல்லை புதிய பஸ் நிலையத்தில் 2 உணவகங்களை மூட உத்தரவு

திருநெல்வேலி, பிப்.25: திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில் சுகாதார சீர்கேட்டுடன் செயல்பட்ட 2 கடைகளை மூட மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

மேலும், அங்கு நடத்தப்பட்ட சோதனையில், சுகாதார சீர்கேட்டுடன் இருந்த உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வேய்ந்தான்குளத்தில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் உணவகங்கள், டீகடைகள் மிகவும் சுகாதார சீர்கேட்டுடன் செயல்படுவதாக பயணிகள் புகார் கூறி வந்தனர். மேலும், இங்கு விற்கப்படும் உணவுப் பொருள்களும் சுகாதாரமற்று இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.

இந் நிலையில், மாநகராட்சி ஆணையர் கா. பாஸ்கரன், செயற்பொறியாளர் நாராயணன் நாயர், மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையர் கருப்பசாமி ஆகியோர் புதிய பஸ் நிலையத்தில் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்கள் அங்கு செயல்படும் உணவகங்களில் ஆய்வு செய்தனர். இதில் நாகர்கோவில் பஸ்கள் நிற்கும் பகுதியில் இரு உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் செயல்படுவதைக் கண்டறிந்த ஆணையர், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் உணவு ஆய்வாளர் அ.ரா. சங்கரலிங்கம் மற்றும் அதிகாரிகள் அந்த 2 உணவகங்களையும் மூடினர். இதேபோல, அங்கு கடைகளில் சுகாதாரமின்றி விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், பார்சல் செய்து வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள்களில் சரியான முறையில் லேபிள் ஒட்டப்பட்டிருக்கிறதா என அவர்கள் சோதனை செய்தனர். சில கடைகளில் சரியான லேபிள் இல்லாமல் உணவுப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

Last Updated on Friday, 26 February 2010 09:33