Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வேலூர் மாநகராட்சியில் ரூ.24 லட்சத்தில் நவீன குப்பை அள்ளும் இயந்திரம், தொட்டிகள்

Print PDF

தினமணி 05.03.2010

வேலூர் மாநகராட்சியில் ரூ.24 லட்சத்தில் நவீன குப்பை அள்ளும் இயந்திரம், தொட்டிகள்

வேலூர், மார்ச் 4: வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை அள்ள ரூ.13 லட்சத்தில் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்ட லாரியும், ரூ.11.25 லட்சத்தில் 25 பிளாஸ்டிக் குப்பைத் தொட்டிகளும் வாங்கப்பட்டுள்ளன.

வேலூர் மாநகராட்சிப் பகுதியில் புதிய பஸ் நிலையம் முதல் சுங்கவாயில் வரையுள்ள சாலையில் அதிக குப்பைகள் சேருகின்றன. இதனால் நகரின் சுகாதாரம் சீர்கெட்டுக் காணப்படுகிறது. இது வேலூருக்கு சுற்றுலாவாக வரும் எண்ணற்ற பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது எனப் புகார்கள் எழுந்தன.

இதனால் வேலூர் நகரில் குப்பை அள்ளும் பணியைத் தனியார் வசம் மாநகராட்சி ஒப்படைத்தது.

ஆனால் இத்திட்டம் தோல்வியில் முடிந்தது. இதனால், தற்போது நகராட்சி வசம் உள்ள பணியாளர்களை வைத்தே குப்பைகள் அள்ளும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

குப்பைகளை ஓரிடத்தில் கொட்டியதும், அங்கிருந்து எளிமையான முறையில் அவற்றைச் சேகரித்துச் செல்ல வசதியாக ரூ.13 லட்சம் மதிப்பில் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்ட லாரியை மாநகராட்சி வாங்கியுள்ளது.

இந்தத் தானியங்கி இயந்திரத்தில் பொருத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட 25 குப்பைத் தொட்டிகள் ரூ.11.25 லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ளன. இவை, சுங்கவாயில் முதல் புதிய பஸ் நிலையம் வரை உள்ள சாலையில் 25 இடங்களில் வைக்கப்படும்.

இவை அனைத்தும் வேலூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டன.

இவற்றின் செயல்பாடுகளை மேயர் ப.கார்த்திகேயன், ஆணையர் செல்வராஜ், மாநகராட்சி நல அலுவலர் பிரியம்வதா, பொறியாளர் தேவகுமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

ஒரிரு தினங்களில் இவை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

Last Updated on Friday, 05 March 2010 12:03