Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உணவகங்களில் தரத்தை கடைப்பிடிக்க வேண்டும்

Print PDF

தினமணி 06.03.2010

உணவகங்களில் தரத்தை கடைப்பிடிக்க வேண்டும்

மதுரை, மார்ச் 5: உணவகங்கள் நடத்துவோர் தரத்தையும், சுகாதாரத்தையும் பேணுவதுடன் சமுதாயப் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என (பொது சுகாதாரம்) இயக்குநர் எஸ். இளங்கோ வலியுறுத்தினார்

மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில், உணவகங்களில் உணவுப் பொருள்களைக் கையாளும் முறைகள் குறித்து, உணவக உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான பயிற்சிமுகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமைத் தொடங்கிவைத்து அவர் பேசியதாவது:

சுகாதாரமான முறையில் உணவு வழங்குவது குறித்து, உணவக உரிமையாளர் மற்றும் பணியாளர்களுக்கு இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. தரமான உணவு உட்கொள்வோர் நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

தாய்லாந்து போன்ற வெளிநாடுகளில் உணவகங்கள் நடத்திவருவோர், குறிப்பாக கையேந்திபவன் நடத்துபவர்கள்கூட தரமான, சுகாதாரமான உணவை வழங்கி வருகின்றனர்.

உணவு வழங்கும் முறையில் சில மாற்றங்களை மேற்கொண்டால் விற்பனையை அதிகரிக்க முடியும். மக்களிடையே சமைத்துச் சாப்பிடும் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது. விவசாயிகள் மட்டும்தான், வீட்டில் சமைத்து சாப்பிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வேலைக்காக பலர் நகரத்துக்கு வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும், வீட்டில் உள்ள இருபாலரும் வேலைக்குச் செல்கின்றனர்.

90 சதவிகிதம் பேர் உணவுக்காக உணவகங்களையே நம்பியிருக்கின்றனர். இவர்களைப் போன்றவர்களுக்கு தரமான உணவைக் கொடுத்து சுகாதாரத்தை பேணவேண்டிய கடமை உணவகம் நடத்துவோருக்கு உள்ளது என்றார் அவர். மாநகராட்சி ஆணையாளர் எஸ். செபாஸ்டின் பேசுகையில், மதுரையில் முதன்முறையாக நடக்கும் இந்த பயிற்சி முகாமை மதுரையில் உணவக உரிமையாளர்கள், உணவகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

முன்னதாக மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் வி. சுப்பரமணியம் வரவேற்றார். குடும்ப நல பயிற்சிமைய மருத்துவர் வே.சண்முகசுந்தரம், சுகாதாரப் பணி துணை இயக்குநர் அ.பழனிச்சாமி உள்ளிட்டோர் பேசினர். நகர்நல உதவி மருத்துவ அலுவலர் யசோதைமணி நன்றி கூறினார்.