Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பலசரக்கு கடை, டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் சுகாதார அதிகாரிகள் குழுவினர் திடீர் ரெய்டு: பருப்புகளில் கலப்படம் புகார் எதிரொலி

Print PDF

தினமலர் 12.03.2010

பலசரக்கு கடை, டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் சுகாதார அதிகாரிகள் குழுவினர் திடீர் ரெய்டு: பருப்புகளில் கலப்படம் புகார் எதிரொலி

திருநெல்வேலி:பலசரக்கு கடை, டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் துவரம்பருப்பு, கடலைப்பருப்புகளில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை நெல்லை சுகாதார அதிகாரிகள் குழுவினர் திடீர் சோதனை நடத்தி பருப்புகளை உணவு மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர்.சமையலுக்கு பயன்படுத்தப்படும் துவரம்பருப்பு, கடலைப் பருப்புகளில் கலப்படம் செய்து விற்கப்படுவதாக பல புகார்கள் அரசுக்கு சென்றன. சமையல் பருப்புகளில் கேசரி பருப்புகளை கலந்து விற்பனை செய்வதால் வாத நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. பருப்புகளில் ஏற்பட்டுள்ள கலப்படத்தை கண்டு பிடிக்கும் வகையில் நேற்று தமிழகம் முழுவதும் சுகாதார அதிகாரிகள் பலசரக்கு கடை மற்றும் டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் திடீர் சோதனை நடத்தினர். சுகாதாரத்துறை இயக்குனர் இளங்கோ, உணவு கலப்பட தடைச் சட்ட இணை இயக்குனர் கண்ணன் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது.

நெல்லை மாநகராட்சி கமிஷனர் பாஸ்கரன் உத்தரவுப்படி சுகாதார அதிகாரி கலுசிவலிங்கம் தலைமையில் உணவு ஆய்வாளர் காளிமுத்து, சுகாதார ஆய்வாளர்கள் அரசகுமார், சாகுல்ஹமீது, முருகன், சுப்பிரமணியன் அடங்கிய குழுவினர் பலசரக்கு கடைகள், ஓட்டல்கள், சில்லரை விற்பனை கடைகளில் இந்த சோதனையை நடத்தினர். பாளை., திருச்செந்தூர் ரோடு டிபார்ட்மென்டல் ஸ்டோரிலும் பருப்புகளை உணவு மாதிரியாக எடுத்து சோதனை செய்தனர். இதே போல் பாளை., பஸ்ஸ்டாண்டு டிபார்ட் மென்டல் ஸ்டோரிலும் பருப்பு உணவு மாதிரியாக எடுத்து சோதனைக்கு அனுப்பப்பட்டது. சோதனையின் போது கலாவதியான 10 கிலோ கடலைப்பருப்பு பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நெல்லை மாவட்டத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீரான் மைதீன் தலைமையில் நெல்லை சுகாதார மாவட்டத்தில் 4 குழுக்களும், சங்கரன்கோவில் சுகாதார மாவட்டத்தில் 2 குழுக்களும் அமைக்கப்பட்டு சோதனை நடந்தது. சங்கர்நகர், மானூர், முக்கூடல், கல்லிடைக்குறிச்சி, களக்காடு, நான்குநேரி, ஆழ்வார்குறிச்சி, பணகுடி, வள்ளியூர், திசையன்விளை பகுதிகளில் இந்த சோதனை நடந்தது. துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் அருணாச்சலம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் ஜின்னா, பாலையா, அக்பர்அலி, ஜான்சன் அடங்கிய குழுவினர் சோதனை நடத்தினர்.

Last Updated on Friday, 12 March 2010 06:34