Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கௌசிகா நதியில் கலக்கும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர்

Print PDF

தினமணி 16.03.2010

கௌசிகா நதியில் கலக்கும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர்

விருதுநகர், மார்ச் 15: விருதுநகரில் பாதாளச் சாக்கடையிலிருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் கௌசிகா நதியில் விடுவதைத் தடுக்க, நகராட்சி நிர்வாகத்துக்கு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வலியுறுத்தியுள்ளது.

விருதுநகரை 6 மண்டலங்களாகப் பிரித்து, பாதாளச் சாக்கடைத் திட்டத்தின் மூலம் வெளியேறும் கழிவு நீரை, அந்தந்த மண்டலங்களில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் உந்து கிணற்றில் சேகரித்து, பின்னர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்த பின்னரே வெளியேற்ற வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட இந்த கழிவு நீரை கௌசிகா நதியில் விடப்பட வேண்டும் என்பதே இத் திட்டமாகும்.

சுமார் ரூ. 23.25 கோடி மதிப்பீட்டில் மூன்றாண்டுகளாக நடைபெற்று வரும் இத் திட்டப் பணிகள், இன்னும் முழுமை பெறவில்லை. இந்நிலையில், திட்ட மதிப்பீடும் அதிகரித்துவிட்டது தனிக் கதையாகும்.

ஆனால், சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் கௌசிகா நதியில் விடப்படுகிறது. இதனால், நதி மாசுபடுவதோடு பொது மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, கடந்த சில மாதங்களாக சுட்டிக்காட்டியும், நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏற்கெனவே, பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளால் நகரெங்கும் சாலைகள் தோண்டி போடப்பட்டுள்ளன. இதனால், பெரும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

எனவே, கௌசிகா நதி மாசுப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகர் நல அமைப்பு நிர்வாகியான டாக்டர் எஸ்.எம். ரத்தினவேல் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு பல முறை கடிதம் எழுதியுள்ளார்.

அவருக்கு அனுப்பப்பட்டுள்ள பதில் கடிதத்தில், கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் கௌசிகா நதியில் கலப்பதை மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர். அதைத் தடுக்கும்படி, நகராட்சிக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது என, மாசுக் கட்டுப்பாடு வாரியப் பொறியாளர் எம். மனோகரன் தெரிவித்துள்ளார்.

ஆனால், இதுவரை நகராட்சி சார்பில் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இது குறித்து, முதல்வர் மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு தந்திகள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாதாளச் சாக்கடை மூலம் வெளியேறும் கழிவு நீரை புதிய தொழில்நுட்ப முறையில் சுத்திகரிப்பு செய்ய நகராட்சி தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

விருதுநகரில் 32 ஏக்கரில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று பாதாளச் சாக்கடைத் திட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated on Tuesday, 16 March 2010 11:39