Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

செம்மொழி மாநாட்டுக்காக ரூ.1.5 கோடியில் செயல்திட்டம்: சுகாதாரத்துறை துணை இயக்குனர்

Print PDF

தினமலர் 24.03.2010

செம்மொழி மாநாட்டுக்காக ரூ.1.5 கோடியில் செயல்திட்டம்: சுகாதாரத்துறை துணை இயக்குனர்

கோவை: மாவட்ட சுகாதாரத்துறை சார்பில், உலகத் தமிழ் செம்மொழி மாநாடு முன்னிட்டு, 1.5 கோடி ரூபாய் மதிப்பில் சுகாதார மேம்பாடு குறித்த செயல்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது; அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது: டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டும். கொசு உற்பத்தியை தடுக்கும் வழிமுறை அறிந்து அதை செயல்படுத்தினால், நோய்களை தவிர்க்கலாம்.

கொசு உற்பத்தியை தவிர்க்க வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருப்பது அவசியம். தண்ணீரை ஒரு வாரத்துக்கு மேல் சேமித்து வைக்கும் போது, போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்; சேமித்து வைக்கும் நீரில் 'டெனிபாஸ்' மருந்தை கலப்பதன் மூலமும், வீடுகளில் அதிகம் நீர் தேங்கும் இடங்களை அடிக்கடி சுத்தம் செய்வது மற்றும் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதன் மூலமும் கொசு உற்பத்தியை தடுக்கலாம். உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் 23 முதல் ஜூன் 27 வரை கோவையில் நடக்கிறது. இதை முன்னிட்டு, மாவட்ட சுகாதாரத்துறை சார்பில், சுகாதாரப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக 1.5 கோடி ரூபாய் மதிப்பில் செயல்திட்டம் தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, கொசு மருந்து தெளிக்கும் பணியாளர்கள் 120 பேரை பணிக்கு எடுத்து, நூறு நாட்களுக்கு அவர்களை இப்பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுப்புற தூய்மை, சுகாதார சூழ்நிலையை ஏற்படுத்தி கொசு இல்லாத நகராக கோவையை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்துடன், குடிநீர், உணவு பொருட்களின் தரத்மேம்படுத்தவும், ஈக்களை அழிக்கவும், சுகாதாரமான உணவு வகை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு, நகரில் உள்ள உணவு பொருட்கள் விற்பனை செய்யும் அனைத்து ஓட்டல்கள், சிற்றுண்டி விடுதிகள், நடைபாதைக் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்; சுகாதாரமற்ற உணவு விற்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப் படும் இந்நடவடிக்கைகளால், செம்மொழி மாநாட்டுக்கு வருவோரின் சுகாதாரத்தை பாதுகாக்க முடியும். தனி நபர்களும், தங்கள் இருப்பிடம், சுற்றுப்புறத்தை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். மாவட்டத்தில், கடந்த 2006ல் 3,642 பேர் டெங்கு, சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். மாவட்ட சுகாதாரத்துறை மேற்கொண்ட நடவடிக்கையால் 2007 மற்றும் 2008ல் இது அடியோடு ஒழிக்கப்பட்டது; 2009ல் 10 பேர் மட்டுமே இந்நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். குடிநீரை பாதுகாப்பாக வைத்திருப்பது மற்றும் திடக்கழிவு மேலாண்மையை முறையாக பின்பற்றினால், கொசு உற்பத்தியை அடியோடு அழிக்க முடியும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Last Updated on Wednesday, 24 March 2010 10:41